வவுனியா சந்தையின் செயற்பாடுகளை இராணுவ ஒத்துழைப்புடன் நடத்த வேண்டிவரும் - அரச அதிபர் எச்சரிக்கை! - News View

About Us

About Us

Breaking

Saturday, April 24, 2021

வவுனியா சந்தையின் செயற்பாடுகளை இராணுவ ஒத்துழைப்புடன் நடத்த வேண்டிவரும் - அரச அதிபர் எச்சரிக்கை!

கொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்த வேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அரச அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சந்தை வியாபாரிகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவதால் சந்தைத் தொகுதியில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வாறு இடம்பெற்றால் தினச் சந்தைச் செயற்பாடுகளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாற்ற வேண்டி ஏற்படும் என்பதுடன் நடைமுறைகள் மீறப்படுமாயின் கமநலத் தினைக்களங்களூடாக இராணுவத்தின் உதவியைப் பெற்றுக் கொண்டு விவசாயிகளின் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வோம் என அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போதைய சூழலில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வவுனியாவில் சுகாதார நடைமுறைகளைப் பேணாமல் அதிகமான பயணிகள் பேருந்துகளில் ஏற்றப்படுவதாக குறித்த விசேட கூட்டத்தில் கல்வித் துறைசார் அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டது.

எனவே, பொலிஸார் ஊடாகப் பேருந்துகளைக் கண்காணிப்பதற்கு ஒரு திட்டம் முறைப்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகளில் பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு பயணிகளை ஏற்றுவது தொடர்பாக பேருந்துத் தரப்பினர் கவனம் செலுத்த வேண்டுமென அரச அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய விசேட கலந்துரையாடலில், வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், புதிதாக வெளயிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது போன்ற விடயங்களும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்து.

No comments:

Post a Comment