வருமானம் ஈட்டித்தருகின்ற சம்மாந்துறை பஸ் டிப்போவை அகற்றுவது முறையல்ல - ஐ.எல்.எம்.மாஹிர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

வருமானம் ஈட்டித்தருகின்ற சம்மாந்துறை பஸ் டிப்போவை அகற்றுவது முறையல்ல - ஐ.எல்.எம்.மாஹிர்

கடந்த 22 வருடங்களாக இயங்கி வந்த வருமானம் ஈட்டும் சம்மாந்துறை பஸ் சாலையை அகற்றுவது முறையற்ற நடவடிக்கையாகும் என்கிறார் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்.

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் டிப்போவை அகற்றுவதை எதிர்த்து சம்மாந்துறை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இப்போராட்டத்தில் பங்கு கொண்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தற்போதய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

கேள்வி: சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை இ.போ.ச பஸ் சாலை விவகாரத்தை விளக்க முடியுமா?

பதில்: ஏ.எச்.எம்.பௌசி போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் யூ.எல்.எம்.முகைதீன் 1998ஆம் ஆண்டு சம்மாந்துறை பஸ் சாலையை அமைத்தார். அன்று மூன்று பஸ்களுடனும் பத்து ஊழியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இருந்த பயங்கரவாத சூழ்நிலையில் இந்த பஸ் சாலையை ஊருக்குள் வைத்திருப்பது பாதுகாப்பு எனக் கருதியே ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பஸ் சாலையை ஆரம்பிப்பதற்காக சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியில் தற்காலிகமாக இடம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு 19 பஸ்களுடனும், 87 ஊழியர்களுடன் இயங்கி வருகின்றது. இந்த பஸ் சாலையின் மூலமாக சம்மாந்துறை பிரதேசத்தை அண்டியுள்ள பல கிராம மக்கள் பயனடைந்து வருகின்றார்கள்.

குறிப்பாக மஜீத் புரம், நெய்னாகாடு வழியாக குடிவில், இறக்காமம் போன்ற பிரதேசங்களுக்கு பயணிக்கின்ற அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் நன்மையடைந்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த பஸ் சாலையை அகற்றுவது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த டிப்போ மூலமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக இரண்டரை இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கின்றது. சம்மாந்துறை பஸ் சாலை வருமானத்தை பெறுகின்ற சாலையாக இருக்கின்ற போது ஏன் இந்தச் சாலையை அகற்ற வேண்டும்? 

இந்த நிலையில் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி சம்மாந்துறை பஸ் சாலைக்கு வந்த இ.போ.ச பிரதம பிராந்திய முகாமையாளர் சாலையின் பதிவேட்டில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இங்கிருக்கின்ற அனைத்து ஊழியர்களும் கல்முனை பஸ் சாலையுடன் இணையுமாறு குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றார். அன்றிலிருந்து இந்தப் பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது.

கேள்வி: இப்போது இந்த சாலை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது ?

பதில்: சம்மாந்துறை மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.

ஆனால் இப்போது அனைத்தும் கல்முனை சாலையுடன் இணைக்கப்பட்டு விட்டன. கடந்த காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரக் கட்டடங்களை அமைத்திருந்தால் இப்போது இந்த பஸ் சாலையை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. 

இந்த நிலையில் நல்ல வருமானம் ஈட்டுகின்ற இந்த சாலையை அகற்றியிருப்பது முறையல்ல. மக்கள் மேற்கொண்டு வருகின்ற இந்தப் போராட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் இருக்கின்ற எந்த அரசியல்வாதியும் பங்கேற்கவில்லை என்பது மிகவும் கலைக்குரிய விடயமாகும்.

பி.எம்.எம்.ஏ.காதர்
(மருதமுனை நிருபர்)

No comments:

Post a Comment