அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்பாடற்ற முறையில் அதிகரிப்பு, கேஸ் விலை குறைப்பிலும் பாரிய மோசடி - சரத் பொன்சேக்கா - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்பாடற்ற முறையில் அதிகரிப்பு, கேஸ் விலை குறைப்பிலும் பாரிய மோசடி - சரத் பொன்சேக்கா

அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்பாடற்ற முறையில் உயர்வடைந்துள்ளதால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டு மக்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்காக பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நாளாந்த நுகர்வுத் தேவைகளுக்கு ஏற்றால் போல் நாளாந்த வருமானங்கள் இல்லாமையும் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாடற்ற விலை என்பவற்றால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கிய வண்ணம்முள்ளனர்.

குறிப்பிட்ட சில வியாபாரிகளின் தேவைகளுக்கேற்ப அரசாங்கம் செயற்படுகிறதேயன்றி மக்களின் தேவைகளுக்கேற்ப செயற்படுவதாக இல்லை.

சீனி மோசடியை ஏற்படுத்தியவர்களே தேங்காய் எண்ணெய் மேசடியையும் ஏற்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாக புரிகிறது. இதையும் தாண்டி மக்களை சூட்சுமமாக ஏமாற்றும் புதிய மோசடியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 

அண்மையில் ஏற்படுத்தப்பட்ட கேஸ் விலைக் குறைப்பு பாரிய ஏமாற்றும் வித்தையாகும். கேஸ் 12.5 கிலோ எடை கொண்ட கொள்ளலவிலிருந்து 03 கிலோ எடையைக் குறைத்து விட்டு 100 ரூபா விலைக் குறைப்பாக காட்டியுள்ளனர்.

உண்மையில் எடை குறைப்பால் 400 அல்லது 500 ரூபாவை மக்கள் மேலதிகமாக செலுத்துகின்றனர். அரசாங்கத்தோடு இருக்கும் சில வியாபார நண்பர்கள் குழுவே இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளன.

கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் நாட்டின் நலனிற்கு பாதிப்பாக அமைந்துள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட பூமிப் பரப்பை தனி சீனாவின் ஆதிக்கத்திற்குட்பட்ட பிரதேசமாக மாற்றும் இந்த ஆணைக்குழுச் சட்டம் என்பதாலயே இதை எதிர்க்கிறோம். 

இலங்கையின் முன்னேற்றத்திற்கு கொழும்புத் துறைமுக நகரம் மிக முக்கிய மூலோபாய இடமாகும். எனவே இதை சீனாவின் ஆதிக்கத்திற்கும் சீனாவின் தேவைக்கு ஏற்பவும் விடக்கூடாது.

கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் முகாமை செய்ய முடியாமையின் விளைவுகளை படிப்பினையாகக் கொண்டு இலங்கை அரசாங்கமும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

கொவிட் பரவல் மற்றும் சிகிச்சையளிப்பு முகாமை விடயங்களில் சுகாதாரத் துறை பலவீனப்டட்டுள்ளதாக சுகாதார நிர்வாக அதிகாரிகளே கூறுகின்றனர்.

தடுப்பூசிளை கொள்வனவு செய்வதற்கு இவ்வளவு காலமும் நிதி ஒதுக்காது தற்போது தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்று ஜனாதிபதி கூறுகிறார். 

கடந்த ஆண்டே தடுப்பூசி கொள்வனவு பற்றி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டேன். அதற்கு அமைச்சர்களான வாசுதேவவும் நாமலும் கிண்டலடித்தனர். இன்று அவை உண்மையாகியுள்ளன என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad