நிலைமாறிய வைரஸ் சிறுவர்களை அதிகளவில் பாதிப்பதாக எந்த தரவுகளுமில்லை, இருப்பினும் இதன் தாக்கத்திலிருந்து பாதுகாக்க சகலரும் அவதானம் செலுத்த வேண்டும் - வைத்தியர் ஹர்ஷ சதிஷ்சந்திர - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

நிலைமாறிய வைரஸ் சிறுவர்களை அதிகளவில் பாதிப்பதாக எந்த தரவுகளுமில்லை, இருப்பினும் இதன் தாக்கத்திலிருந்து பாதுகாக்க சகலரும் அவதானம் செலுத்த வேண்டும் - வைத்தியர் ஹர்ஷ சதிஷ்சந்திர

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது இனங்காணப்பட்டுள்ள நிலைமாறிய வைரஸ் சிறுவர்களை அதிகளவில் பாதிப்பதாக எந்த தரவுகளும் பதிவாகவில்லை. எவ்வாறிருப்பினும் இதன் தாக்கத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதிலும் சகலரும் அவதானம் செலுத்த வேண்டும் என்று வைத்தியர் ஹர்ஷ சதிஷ்சந்திர தெரிவித்தார்.

இலங்கை மருத்துவ சங்கத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், பி.117 வைரஸ் மூலம் இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதம் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு, மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. எனினும் அந்நாட்டிலும் இந்த வைரஸ் சிறுவர்களை அதிகமாக தாக்கியதாக எந்த தகவல்களும் பதிவாகவில்லை.

இலங்கையில் அவ்வாறு எதுவும் பதிவாகவில்லை. எவ்வாறிருப்பினும் சிறுவர்களை வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் வைரஸ் பரவல் ஏற்பட்ட போது சாதாரண அறிகுறிகளே தென்பட்டன. எனினும் தற்போது தடிமன், வரட்டு இருமள், உடல் வலி, சுவாசிப்பதில் சிரமம், மணங்களை உணர முடியாத நிலைமை உள்ளிட்ட பல அறிகுறிகள் தென்படுகின்றன. அத்தோடு இவை வேகமாகப் பரவக்கூடிய தன்மையுடையதாகவும் உள்ளது.

இதன் மூலமாக பாதிப்பை தவிர்த்துக் கொள்வதற்கு அநாவசியமாக வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளல், முகக் கவசம் அணிதல், 8 மணித்தியாலங்களில் இதனை மாற்றுதல், நபர்களுக்கிடையில் 2 மீற்றர் தூர இடைவெளியைப் பேணுதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் என்பவற்றை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்.

தொற்றாளர்கள் எண்ணிக்கை எந்தளவிற்கு அதிகரித்தாலும் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு வைத்திய கட்டமைப்பு தயாராகவுள்ளது. எனவே மக்கள் வீண் அச்சமடையாமல் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad