இஸ்ரேலில் விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சியில் 44 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

இஸ்ரேலில் விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சியில் 44 பேர் பலி

வடகிழக்கு இஸ்ரேலில் சமய விழா ஒன்றில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெரோன் மலை அடிவாரத்தில் வருடாந்தம் இடம்பெறும் லாக் ஓமர் விழாவின்போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் பலரும் காயமடைந்துள்ளனர்.

இதனை ஒரு பேரழிவு என்று விபரித்திருக்கும் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று ஆரம்பமானது தொடக்கம் இஸ்ரேலில் இடம்பெற்ற மிகப்பெரிய நிகழ்வான இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பழைமைவாத யூதர்கள் பங்கேற்றனர்.

இஸ்ரேலில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு பல கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. எனினும் இந்த விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே கொவிட்-19 அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

இந்த விழா இடம்பெறும் பகுதியில் கட்டுமானம் ஒன்று இடிந்து விழுந்ததாக ஆரம்பக்கட்ட செய்திகள் தெரிவித்தன. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை இந்த விபத்து நேர்ந்திருப்பதாக அவசரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

இதன்போது பங்கேற்பாளர்கள் சிலர் படிகளில் தடுக்கி விழுந்த நிலையில் அதனைத் தொடர்ந்து மேலும் பலர் ஒருவர் மேல் ஒருவர் விழ ஆரம்பித்ததாக பொலிஸாரை மேற்கோள் காட்டி ஹாரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

'சில வினாடிகளில் அது நிகழ்ந்தது. மக்கள் விழுந்து, ஒருவருக்கு ஒருவர் மிதித்துக்கொண்டனர். அது ஒரு பேரழிவாக இருந்தது' என்று சம்பவத்தை பார்த்த ஒருவர் மேற்படி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின்போது, குறுகலான பாதை ஒன்றால் ஆயிரக்கணக்கானவர்கள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

மக்களை வெளியேறும்படி ஒலிபெருக்கியில் கூறியபோது குண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக நினைத்தே என்று ஒரு யாத்திரிகர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அந்தத் தலத்தில் இருக்கும் அனைவரையும் வெளியேறும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

'இவ்வாறான ஒரு நிகழ்வு இங்கு நடந்திருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்' என்று அவர் சென்னல் 12 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

பல டஜன் அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு உடல்கள் தரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் அழைத்துக் செல்லப்பட்டதோடு, தேடுதல் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக இராணுவம் தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் குறைந்தது 103 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 38 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

'அங்கே பெரும் கூட்டம் இருந்தது. நகர்வதற்கு இடம் இருக்கவில்லை. மக்கள் தரையில் விழ ஆரம்பித்தார்கள். அதிகமானவர்கள் தரையில் விழுந்தார்கள்' என்று அந்த நிகழ்வில் பங்கேற்க வந்த ஒருவர் பி.பி.சி தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

'1000 க்கும் அதிகமானவர்கள் மிக மிக சிறிய இடத்தின் வழியாக குறுகலான பாதையில் ஒன்றாக செல்ல முயன்றபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்' என்று ஓர்தடொக்ஸ் ஜூஸ் இணையதளத்தின் செய்தியாளர் பெஹட்ரே ஹரடிம் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் கூட்டம் காரணமாக குறித்த தலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை செயற்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் முன்னதாக கூறி இருந்தனர்.

இந்த அனர்த்தம் இடம்பெறுவதற்கு முன்னர் ஒழுங்கு விதிகளை பேணுவதில் இடையூறு செய்த இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad