மழலையர் பள்ளிக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் - 18 பேர் படுகாயம் - மர்ம நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்த பொலிஸார் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

மழலையர் பள்ளிக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் - 18 பேர் படுகாயம் - மர்ம நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்த பொலிஸார்

சீனாவில் அண்மைக் காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.‌ குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் குவாங்சி ஜுவாங் பிராந்தியத்தில் உள்ள மழலையர் பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.

அப்போது கையில் கத்தியுடன் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் வகுப்பறைகளுக்குள் புகுந்து அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக குத்தினார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் 2 பேர் மர்ம நபரிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்காக ஓடிச் சென்றனர்.

ஆனால் அந்த மர்ம நபர் அவர்களையும் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார். இந்த கோர சம்பவத்தில் 16 குழந்தைகளும் 2 ஆசிரியர்களும் பலத்த காயமடைந்தனர்.‌

இதற்கிடையில் இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பள்ளிக்கூடத்தை சுற்றி வளைத்து தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.‌

கடந்த ஜனவரி மாதம் யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததும் கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றதும் நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad