1000 ரூபா சம்பள வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது, எதிர்த்தரப்பினர் வரவேற்காவிட்டாலும் கம்பனிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் - செந்தில் தொண்டமான் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

1000 ரூபா சம்பள வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது, எதிர்த்தரப்பினர் வரவேற்காவிட்டாலும் கம்பனிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் - செந்தில் தொண்டமான்

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இது போன்ற சாதனைகளை வரவேற்காவிட்டாலும் கம்பனிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் என்று எதிர்த்தரப்பினரை கேட்டுக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் சாதனைகளில் 1000 ரூபா சம்பள விவகாரம் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. பிரஜாவுரிமை மற்றும் கூட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட பல விடயங்கள் மறைந்த முன்னாள் தலைவர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டன. இதேபோன்று தற்போது 1000 ரூபா சம்பள அதிகரிப்பும் பாரிய சாதனையாகும்.

கடந்த அரசாங்கத்திலிருந்தவர்களால் ஒரு குறுகிய அதிகரிப்பைக் கூட பெற்றுக் கொடுக்க முடியவில்லை. மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்தார். தற்போது அவர் இல்லாத போதிலும் அவரால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கொவிட் சூழல் காரணமாக சற்று கால தாமதம் ஏற்பட்டது. அவ்வாறில்லை எனில் துரிதமாக இதனைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.

எனினும் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காமலிருப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக கம்பனிகள் முயற்சித்தன. இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அந்த முயற்சிகளை முறியடித்து தேவையான ஆவணங்களை வழங்கி சம்பளத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

கட்சியின் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனைக்கமையவும், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் சட்ட உறுப்பினர்களின் வாதத்தின் மூலம் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றத்தில் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு வழங்காமல் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே மலையத்தில் ஏப்ரல் 14 ஆம் திகதி மகிழ்ச்சியான புதுவருடத்தை கொண்டாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் எதிர்த்தரப்பினர் எமக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்காவிட்டாலும், கம்பனிகளுக்கு சார்பாக செயற்படக்கூடாது என்று கேட்டுக் கொள்கின்றோம். காரணம் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அங்கத்தவர்களுக்கு மாத்திரம் இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெறவில்லை. ஏனைய தொழிற்சங்கத்தினருக்கும் கிடைக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad