பீல்ட் மார்ஷல் பதவியிலுள்ளவர்களுக்கு சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படுவதில்லை, ஆனால் வாழ்நாள் வரை பதவியில் நீடிக்கலாம் - சமல் ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

பீல்ட் மார்ஷல் பதவியிலுள்ளவர்களுக்கு சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படுவதில்லை, ஆனால் வாழ்நாள் வரை பதவியில் நீடிக்கலாம் - சமல் ராஜபக்ஷ

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பீல்ட் மார்ஷல் பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படுவதில்லை. ஆனால் வாழ்நாள் வரையில் பீல்ட் மார்ஷல் பதவி நீடிக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பீல்ட் மார்ஷல் பதவியென்பது இராணுவத்தில் உள்ள உயர் பதவியாகும். இராணுவச் சம்பிரதாயங்களுக்கு அமைவாக பீல்ட் மார்ஷல் பதவியும், அதற்கு இணையாக கடற்படையில் உள்ளவர்களுக்கும் அப்பதவி வழங்கப்படுகின்றது. அப்பதவியைப் பெறுபவர்கள் வாழ்நாள் வரையில் அந்த பதவியில் இருப்பார்கள்.

அத்துடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அவரது பணியாட் தொகுதிக்காக 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர், அவருக்குப் படையினரின் உத்தியோகபூர்வ காரொன்றும் வழங்கப்பட்டுள்ளது, சரத் பொன்சேகாவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் எதுவும் வழங்கப்படவில்லை.

மேலும் அட்மிரல் கரண்ணாகொடவுக்குப் பணியாட் தொகுதிக்காக 09 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பணியாட் தொகுதியினரின் பாவனைக்காக ஜீப் ரக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது.

விமானப் படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டபிள்யூ.டி.ஆர்.ஜே. குணதிலக்கவுக்கு பணியாட் தொகுதிக்காக 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, உத்தியோகபூர்வ இல்லமோ, வாகனமோ வழங்கப்படவில்லை.

அத்துடன் பீல்ட் மார்ஷல் பதவி வகிப்போருக்கு சம்பளமோ அல்லது ஓய்வுதீயங்களோ வழங்கப்படுவதில்லை என்றார்

No comments:

Post a Comment

Post Bottom Ad