தமிழ், சிங்கள புத்தாண்டு காலப் பகுதிக்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு : ஒரு நிகழ்வில் 100 பேருக்கு மாத்திரம் அனுமதி - ஒரு சில விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

தமிழ், சிங்கள புத்தாண்டு காலப் பகுதிக்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு : ஒரு நிகழ்வில் 100 பேருக்கு மாத்திரம் அனுமதி - ஒரு சில விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு வைபவங்கள், விழாக்கள், கலை கலாசார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கொவிட்-19 தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இதில் கலை, கலாசார விடயங்களை அனுசரிப்பது மற்றும் இக்கொண்டாட்டங்களின் போது விளையாட்டுகள், நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள், வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்தலின் போது வர்த்தகர்கள், நுகர்வோர் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்,, நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, ஒழுங்கு செய்வோர், பங்குபற்றுவோர் பின்பற்ற வேண்டிய விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

விழாக்களின்போது, ஒரு இடத்தில் 100 பேருக்கு குறைவானோருக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இசை நிகழ்ச்சிகளை நடாத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளி பேணுதல், உரிய முறையில் முகக்கவசம் அணிதல், உரிய முறையில் கைகளை கழுவுதல், உரிய முறையில் கிருமி நீக்கம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உள்ளிட்டோர் எவ்வித நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து சந்தர்ப்பங்களிலும் கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான அனைத்து வழி வகைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுவருட விளையாட்டுகளில் சிலவற்றை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கையிறிழுத்தல், தலையணைச் சண்டை உள்ளிட்ட போட்டிகளின் போது சமூக இடைவெளி பேணுதல், தலையணை பயன்பாடு போன்றவற்றின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதால் அவற்றை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

அத்துடன், சைக்கிளோட்டம், மரதன் போன்ற போட்டிகளின் போது போட்டியின் ஆரம்பத்திலும் இறுதியிலும் சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவற்றை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அது தவிர, புதுவருட அழகன், அழகி போட்டிகளின் போது, ஒப்பனைகள் உள்ளிட்ட விடயங்களின்போது கொவிட்-19 பரவல் அவதானம் உள்ளதால், அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளதுடன், அவர்கள் உரிய சந்தர்ப்பத்தில் மாத்திரம் முகக்கவசம் அணியாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய ஒன்றுகூடல் சந்தர்ப்பங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டில் மக்கள் ஒன்றுகூடல்கள் அதிகரிக்கும் நிலையில், புத்தாண்டின் பின்னர் கொவிட்-19 இன் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் இருப்பதால், அதனைத் தடுக்கும் பொருட்டே குறித்த சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

எனவே மீண்டும் COVID-19 தொற்று அதிகரிப்பதைத் தடுக்க, உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட் பரவலின் முதலாவது அலை கடந்த வருடம் (2020) மார்ச் மாதம் ஆரம்பித்த நிலையில், சென்ற வருட தமிழ், சிங்கள புதுவருடத்தின் போது நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போதை புதுவருடத்தை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment