அஸ்ராஜெனிகா ஏற்றியோருக்கு சினோபார்ம் தடுப்பூசியை ஏற்ற திட்டமா ? : 10 ஆயிரம் சீனர்களுக்கு 6 இலட்சம் சீன தடுப்பூசி எதற்கு என்கிறது எதிர்க்கட்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

அஸ்ராஜெனிகா ஏற்றியோருக்கு சினோபார்ம் தடுப்பூசியை ஏற்ற திட்டமா ? : 10 ஆயிரம் சீனர்களுக்கு 6 இலட்சம் சீன தடுப்பூசி எதற்கு என்கிறது எதிர்க்கட்சி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் பணிபுரியும் பத்தாயிரம் சீனர்களுக்கு ஆறு இலட்சம் "சினோபார்ம்" தடுப்பூசிகளை கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? இலங்கையில் முதலாம் கட்ட தடுப்பூசியாக அஸ்ராஜெனிகா ஏற்றிக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியாக சீன தடுப்பூசியை ஏற்றவா அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சியினர் சபையில் கேள்வி எழுப்பினர்.

தடுப்பூசியை மாற்றுவதற்கு இப்போது பரிந்துரைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுமாவென தெரியவில்லை என கொவிட்-19 வைரஸ் தடுப்பு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்படும் காலம் குறித்து கேள்வி எழுப்பினர்,

இதன்போது கேள்வி எழுப்பிய சமிந்த விஜயசிறி எம்.பி, "சினோபார்ம்" தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் இன்னமும் அனுமதிக்கவில்லை, அவ்வாறு இருக்கையில் நாட்டில் பணிபுரியும் பத்தாயிரம் சீனர்களுக்கு ஆறு இலட்சம் "சினோபார்ம்" தடுப்பூசி கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒருவருக்கு இரு தடுப்பூசிகள் என்றாலும் கூட 20 ஆயிரம் தடுப்பூசிகள் போதும், ஆனால் ஆறு இலட்சம் தடுப்பூசிகள் எதற்கு ? அப்படியென்றால் ஏனைய தடுப்பூசிகள் இலங்கையில் முதலாம் தடுப்பூசியாக அஸ்ராஜெனிகா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக "சினோபார்ம்" தடுப்பூசியை ஏற்றவா என கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, "சினோபார்ம்" தடுப்பூசியை பயன்படுத்த முடியாது எனக் கூறிய நிபுணர் குழு உறுப்பினர்களை அரசாங்கம் நீக்கியுள்ளது, அப்படியென்றால் இரண்டாம் தடுப்பூசியாக "சினோபார்ம்" ஊசியை பயன்படுத்த திட்டம் உள்ளதென்பது தெளிவாகின்றது. எனவே அரசாங்கம் இதற்கு பதில் தெரிவிக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment