அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவை தீவுகளுக்கு அரச அம்புலன்ஸ் படகுச் சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி. சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது சுகாதார அமைச்சரிடம் அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
சிறிதரன் எம்.பி. தமது கேள்வியில், அனலைத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைத் தீவு பகுதிகளுக்கு அரச அம்புலன்ஸ் படகுச் சேவை இல்லாதுள்ளது.
யாழ். மாவட்டத்தில் தரைத் தொடர்பு இல்லாத தீவுகள் அனைத்திலும் இதே நிலைதான் காணப்படுகிறது. அதேபோன்று வேலனை, ஊர்காவற்த்துறை வைத்தியசாலைகளும் பாரிய குறைப்பாடுகளுடன்தான் இயங்குகின்றன.
மிகவும் குறைப்பாடுகளுடன் இயங்கும் நெடுந்தீவு வைத்தியசாலையிலிருந்து யாழ். வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டுவர அரச படகுச் சேவையொன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.
நெடுந்தீவிலிருந்தான 13 கடல் மைல்கள் பயணம் மிகவும் ஆபத்தான பயணமாகும். அரச ஊழியர்கள் முதல் அனைத்து தொழிலாளர்களும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
அதேபோன்று நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். தற்காலிகமாக வந்து செல்லும் வைத்தியர்கள் இருவர் மாத்திரமே உள்ளனர் என்றார்.
இந்த விடயம் தொடர்பில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சிறிதரன் எம்.பியிடம் உறுதியளித்தார்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment