ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46 ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை, 11 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.
47 உறுப்பு நாடுகளைக் கொண்ட, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
இலங்கை தொடர்பாக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாமல் போனதாக, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
47 உறுப்பு நாடுகளில், 25 நாடுகளது அனுமதி இந்த பிரேரணைக்கு கிடைக்கவில்லையெனவும், இதன் ஊடாக வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்த நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளமை புலப்படுவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து, இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
இதேநேரம், இந்தியா, தமிழ் மக்கள் மற்றும் இலங்கை தொடர்பாக ஆழமாக சிந்தித்து ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் செயற்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment