அரசியல் சாக்கடை என்று எண்ணி வெளியே போகாதீர்கள், அதனை இறங்கி துப்புரவு செய்யுங்கள் - பாடசாலைகளுக்கு கட்டிடங்களை கட்டிக் கொடுத்தால் கல்வி மேம்படும் என்று நினைக்கின்றனர் : அமைச்சர் ஜீவன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

அரசியல் சாக்கடை என்று எண்ணி வெளியே போகாதீர்கள், அதனை இறங்கி துப்புரவு செய்யுங்கள் - பாடசாலைகளுக்கு கட்டிடங்களை கட்டிக் கொடுத்தால் கல்வி மேம்படும் என்று நினைக்கின்றனர் : அமைச்சர் ஜீவன்

மலையகத்தில் படித்த இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மலையகம் மாற்றம் பெறும். மாணவர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணி வெளியே போகாதீர்கள். அதனை இறங்கி துப்புரவு செய்யுங்கள் என தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்திய இலங்கை சமுதாய பேரவையுடன் இணைந்து நாவலப்பிட்டி கதிரேசன் வித்தியாலயத்தில் மூன்று திறன் வகுப்புக்களை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் முன்னர் தோட்ட பாடசாலை என்ற ஒன்று இருக்கவில்லை. மடுவங்கள்தான் இருந்தன. தற்போது அவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று வந்தாலும்கூட அவை முழுமையாக அபிவிருத்தியடையவில்லை. இன்று அந்த பாடசாலையில் மாணவர்கள் கற்றுதான் வருகின்றனர். ஆகவே இந்த பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய பாரிய தேவை எமக்குள்ளது.

இன்று நாட்டில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பேசும் போது ஹற்றன் ஹைலன்ஸ் கல்லூரியினை பற்றி பேசுவோம். நாவலப்பிட்டி கதிரேசன் பாடசாலையை பற்றி பேசுவோம். நான் மூன்று வருடத்திற்கு முன்னர் கொத்மலையில் வேலை செய்யும் போது தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு அதிபர்கள், ஆசிரியர்கள் என்னிடம் கோரினார்கள் அப்போது இவர்கள் தேவையில்லாதவற்றை எல்லாம் கேட்பார்கள். எங்களுக்கு ஒரு விஞ்ஞானகூடம் கட்டித்தாங்க என்று ஒரு மாணவன் என்னிடம் கேட்டான். அவ்வாறு தூர நோக்கோடு சிந்திக்கின்ற மாணவர்கள்தான் எமக்கு தேவை. 

நீங்கள் பாடசாலைக்கு வருவது வெறுமனே படித்துவிட்டு போவதற்கு மட்டும் அல்ல. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தினை அபிவிருத்தி செய்தால்தான் மலையகத்தினை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். 

நீங்கள் சிந்தித்து பாருங்கள் நன்றாக படித்த சிலர் வெளிநாடுகளுக்கு சென்று நல்ல தொழில்களில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இங்கு வருவதில்லை. நாம் எங்கு சென்றாலும் என்ன வளர்ச்சி பெற்றாலும் மலையகம்தான் எமது தாயகம். ஆகவே அதனை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது.

இன்று (ஸ்மார்ட் கிலாஸ்) திறன் வகுப்புக்கள் பாடசாலைகளில் மாத்திரம் அமைக்கக்கூடாது. தொழிற்கல்வி நிலையங்கள் போன்றவற்றிக்கும் இவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும். நவீன மலையகத்தினை மாணவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அதே நேரம் இன்று பல இடங்களில் நிறைய நூலகங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் புத்தகங்கள் கிடையாது. அவை வேறு தேவைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே நகர நூலகத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளோம். எதிர்காலத்தில் நகரங்களுக்கு நூலக வசதிகளை எமது தலைவர்கள் ஊடாக பெற்றுக் கொடுப்போம். 

கணனி அறிவினை விருத்தி செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் பிரஜாசக்தி நிலையங்களை உருவாக்கினோம். இன்று அவை இயங்காத நிலையில் காணப்படுகின்றன. உயிரற்று கிடந்த பிரஜாசக்தி நிலையங்களுக்கு உயிர் கொடுத்தவர் கணேஸ் தேவநாயகம். இன்று ஒரு சில நிலையங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு முழுமையாக உயிர் கொடுக்க வேண்டும். அதற்கு உதவியாக பரத் அருள்சாமியும் இணைந்து செயற்படுவார். இவர்கள் இருவரும் இணைந்து மாணவர்கனை மாற்றுவார்கள் என நம்புகிறேன்.

இன்று அதிகமானவர்கள் பாடசாலைக்கு கட்டிடங்களை கட்டிக் கொடுத்தால் அல்லது மதில்களை கட்டிக் கொடுத்தால் அதனூடாக கல்வி மேம்படும் என்று நினைத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அதனை தாண்டி இன்று எத்தனையோ விடயங்கள் உள்ளன. 

நன்றாக படித்து சிறந்த புள்ளிகளை பெற்றவர்கள் எத்தனையோ பேர் இன்று தொழில் இன்றி இருக்கின்றனர். குறிப்பாக இந்த நாட்டில் ஏனைய மாவட்டங்களை விட நுவரெலியா மாவட்டத்தில்தான் இந்த நிலைமை அதிகமாக இருக்கின்றது. ஆகவே வேலையற்று இருக்கும் எண்ணிக்கையை குறைப்பதற்கு பல திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்கு பாடசாலையிலேயே தொழிற்கல்வியினையும் விருத்தி செய்ய வேண்டும்.

இங்குள்ள குறைகளையும் எதிர்காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன் போது தெரிவித்தார்.

ஹற்றன் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad