ஊடகவியலாளர்கள் மிகத் தெளிவுடன் நடந்து கொண்டால் நாட்டில் வீணான சந்தேகங்கள், பதற்றங்கள் பரவும் நிலை ஏற்படாது - ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

ஊடகவியலாளர்கள் மிகத் தெளிவுடன் நடந்து கொண்டால் நாட்டில் வீணான சந்தேகங்கள், பதற்றங்கள் பரவும் நிலை ஏற்படாது - ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவிப்பு

ஊடகவியலாளர்கள் மிகத் தெளிவுடன் நடந்து கொண்டால் நாட்டில் வீணான சந்தேகங்கள், பதற்றங்கள் பரவும் நிலை ஏற்படாதென தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையிலே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கும் அல்லது அரசியலாக்கிப் பேசும் மனநிலைகளிலிருந்து முதலில் நாம் விடுபட வேண்டும். சங்கடங்கள், சவால்கள் மற்றும் சந்தேகங்களை அரசியலாக்கத்தான் சிலர் முயற்சிக்கின்றனர். கொள்கையில் மக்களை ஒற்றுமைப்படுத்த இயலாத சில அரசியல்வாதிகள், நடப்பவை அனைத்தையும் அரசியலாக்கி ஆதாயம் காண முனைவதால்தான், சிறுபான்மையினர் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது எல்லோரும் வாழ்வதற்கான நாட்டை உருவாக்கும் சிந்தனை. இதில், தத்தமது அடையாளங்களுடன் மக்கள் வாழ்வதற்கு வழிவகுக்கப்படும். புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள், ஆலோசைனகள் மக்களிடமும் கோரப்பட்டுள்ளன. அவரவர், தங்களுக்கேற்ற அல்லது வசதியான ஆலோசனைகளை முன்வைக்கலாம். இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது, தவிர்ப்பது என்ற முடிவுகளை இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவினரே தீர்மானிப்பர். 

இதற்கிடையில், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை அரசியலமைப்பாகக் கருதச் சிலர் அவசரப்படுகின்றனர். இதற்குச் சில ஊடகங்களும் ஒத்துழைக்கின்றன. இதுதான் கவலை. மன இறுக்கங்கள் இடைவெளியாகிச் செல்வதற்கு இவ்வாறான கலை நிகழ்ச்சிகள் கை கொடுக்கும். பண்டையத் தொழில்களில் ஏன் இன்றும் சில தொழில்களைச் செய்யும் போது, நாட்டார் பாடல்களைப் பாடிக்கொண்டுதானே செய்கின்றனர். கலை கலந்த வேலையில் அலுப்பிருக்காது என்பதும் இதைத்தானே. 

எத்தனையோ அறிவிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளுக்கு இந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் கை கொடுத்துள்ளது. இவ்வாறானவர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்ந்து எமது நாட்டின் மொழி,கலாசாரங்களை பாரறியச் செய்வது மகிழ்ச்சி தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.

ராஜகிரிய நிருபர்

No comments:

Post a Comment