ரஞ்சன் ராமநாயக்காவின் விடுமுறை பிரேரணையை நிராகரித்தது சபாநாயகரின் பக்கச்சார்பான செயற்பாடாகும் : எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

ரஞ்சன் ராமநாயக்காவின் விடுமுறை பிரேரணையை நிராகரித்தது சபாநாயகரின் பக்கச்சார்பான செயற்பாடாகும் : எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அவ்வாறே தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்திருந்தும் அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மற்றும் அவரின் விடுமுறை பிரேரணையை நிராகரித்திருப்பது சபாநாயகரின் பக்கச்சார்பான செயற்பாடாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற விடுமுறை பிரேரணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற விடுமுறை பிரேரணையை எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கையளித்தபோது அதனை சபாநாயகரான நீங்கள் நிராகரித்திருக்கின்றீர்கள். 

ரஞ்சன் ராமநாயக்க இன்னும் பாராளுமன்ற உறுப்பினராகவே இருக்கின்றார். அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்ந்து பாதுகாக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்திருக்கின்றது.

அத்துடன் இந்த சபையில் ஒரு உறுப்பினர் நீதிமன்ற தண்டனை உத்தரவுக்கு மேன்முறையீடு செய்தமை காரணமாக அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளபோதும் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்து வர நிராகரித்திருப்பது, பக்கச்சார்பான தீர்மானமாகும். அவ்வாறு செயற்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், ஏப்ரல் 6ஆம் திகதிக்கு பின்னரே ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்தாகும் என்றால், அதற்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்ற சபை அமர்வு கூட்டப்பட முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பாராளுமன்ற பதவிக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்குரியது. அதனை நிராகரிக்கக் கூடாது என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றமே தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கின்றது. அதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாது. தற்போது அவர் நீதிமன்ற தண்டனையை பெற்று வருகின்றார். அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக எதிர்வரும 16ஆம் திகதி நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும். அதுவரை அவர் தொடர்பாக எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது.

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பபட்ட தீர்ப்பின் பிரகாரம் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக் காலம் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதியே ரத்தாகின்றது. அதற்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றம் கூடுகின்றது. அதனால் நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின்னரே ஒரு தீர்மானத்துக்கு வர முடியும் என்றார்.

No comments:

Post a Comment