மாகாண சபை தேர்தலை பழைய முறைமையில் ஜூலை மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசம் - காஞ்சன ஜயரத்ன - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

மாகாண சபை தேர்தலை பழைய முறைமையில் ஜூலை மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசம் - காஞ்சன ஜயரத்ன

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை பழைய முறைமையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இத்தீர்மானத்துக்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை தவறான செயற்பாடாகும். இவ்விடயம் குறித்து பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் மாகாண சபை ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை திட்டமிட்ட வகையில் பிற்போட்டது. மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல் நிறைவேற்று துறையின் பிரதிநிதியால் மாகாண சபைகளின் நிர்வாகம் நிர்வகிக்கப்படுகின்றமை ஜனநாயக கொள்கைக்கு முரணானது. மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றிருக்கும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு சட்ட சிக்கல் ஒருபுறம் காணப்படுகின்ற பட்சத்தில் பிறிதொரு புறம் பொதுகாரணிகளும் செல்வாக்கு செலுத்தின. இம்மாதம் முதல் வாரத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

மாகாண சபை தேர்தலை பழைய முறைமையின் கீழ் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் மாகாண சபைக்கு எதிரான தங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை அரசாங்கத்தின் நிலைப்பாடாகக் கூறுகின்றனர்.

மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போட்டு மாகாண சபை முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் சிலரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கவலைக்குரியவை. இவ்விடயம் குறித்து பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad