சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் : நாமலை நேரில் சந்தித்து ஹரீஸ், பைசால் பேச்சுவார்த்தை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் : நாமலை நேரில் சந்தித்து ஹரீஸ், பைசால் பேச்சுவார்த்தை

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பஸ் டிப்போ விடயமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவை செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலின் போது சம்மாந்துறை டிப்போவானது அதிக இலாபம் ஈட்டும் ஒரு நிலையம் என்பதையும் அந்த பிரதேசத்தில் ஏன் இந்த டிப்போ தேவை அதன் அவசியங்கள் குறித்தும் விளக்கியதுடன் இது தொடர்பில் உடனடியாக சிறந்த தீர்வை பெற்றுத் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரை கேட்டுக் கொண்டார்கள். 

இதன்போது பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இது தொடர்பில் நிரந்தர தீர்வை தான் பெற்றுத் தருவதாக எம்.பிக்களுக்கு உறுதியளித்தார்.

அன்று பகல் 02.00 மணியளவில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் ஆலோசனை கூட்டத்திலும் இது விடயமாக பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், றிசாத் பதியுதீன், பைசால் காசிம், இசாக் ரஹ்மான் போன்றோர் தம்முடைய கருத்துக்களை முன்வைத்தனர். 

இதன்போது பதிலளித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நிதியமைச்சுடன் கலந்துரையாடி இவ்விடயம் தொடர்பில் ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாக கூறினார். 

இருந்தாலும் இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்சவூடாக பிரதமரை சந்தித்து பேச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment