சீனி வரி குறைப்பால் அரசுக்கு வருமானம் இழப்பே தவிர மோசடிகள் இடம்பெறவில்லை என்கிறார் அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

சீனி வரி குறைப்பால் அரசுக்கு வருமானம் இழப்பே தவிர மோசடிகள் இடம்பெறவில்லை என்கிறார் அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால்

சீனி இறக்குமதிக்கான வரி குறைப்பால் அரச வருமானம் இழக்கப்பட்டுள்ளதே தவிர எவ்வித ஊழல் மோசடிகளும் இடம்பெறவில்லை. வரி குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கே சென்றுள்ளதென இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது, சீனி இறக்குமதிக்கான வரி குறைப்புத் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரங்களை கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் முன்னெடுத்து வருகின்றனர். அரச வரிக் கொள்கையானது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைக்கு மத்தியில்தான் எடுக்கப்படுகின்றன.

நாட்டில் உள்ள நிலைமைகள் மற்றும் சர்வதேச நிலைமைகளை ஆய்வுக்கு உட்படுத்தியே தீர்மானங்களை ஒரு அரசாங்கம் எடுக்கும். அரச நிதிக் கொள்கையானது சில சந்தர்ப்பங்களில் இலகுவானதாகவும் சில சந்தர்ப்பங்களில் இறுக்கமானதாகவும் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளும் ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் இடையில் வேறுபட்டதாக காணப்படும். 

நிதி அமைச்சின் கூற்றின் பிரகாரம் 2015ஆம் ஆண்டு முதல் சீனிக்கான வரி 30 ரூபாவாக இருந்தது. 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் 16ஆம் திகதி சீனியின் வரி 30 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைக்கப்பட்டது. ஆகவே, எமது அரசாங்கத்தில் மாத்திரமல்ல கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் சீனியின் விலை 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

வரியை குறைத்து தொடர்ந்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வரி குறைக்கப்பட்ட இரண்டு மாதத்தில் மீண்டும் 15 ரூபாவாக சீனியின் வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாம் அவ்வாறு செய்யவில்லை. தொடர்ந்து 25 சதமாகவே சீனியின் வரியை பேணுகிறோம். 35 ரூபாவிலிருந்த சீனியின் வரியை 50 ரூபாவாக அதிகரித்து பின்னர் 25 சதமாக குறைத்திருந்தோம். 

சீனியின் வரியை மாத்திரம் நாம் குறைத்திருக்கவில்லை. பெரிய வெங்காயம், பருப்பு, டின் மீன் உள்ளிட்ட பொருட்களின் வரியையும் 25 சதமாக குறைத்திருந்தோம். பொதுவாகவே வரியை குறைத்திருந்தோம். சீனிக்கான வரி குறைப்பால் 15.5 பில்லியனை நாம் பெற்றுக் கொள்ளவில்லை. இது ஊழல் அல்ல. ஆனால், கடந்த அரசாங்கம் வேண்டுமென்றே அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கையெடுத்தனர்.

நாம் மக்களுக்கான சலுகையையே இதன்மூலம் பெற்றுக் கொடுத்துள்ளோம். இந்த ஆறு பொருட்களுக்கான வரி 25 சதமாக குறைக்கப்பட்டதால் 21.7 பில்லியன் நிதியை அரசாங்கம் இழந்தது. ஆனால், அதன் பிரதிபலன் மக்களுக்குச் செல்லும் வகையிலேயே இந்த வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சலுகை செல்லவில்லையென கூறுகின்றனர். வரி குறைப்பு செய்யப்பட்ட உடனே பிரதிபலன் மக்களுக்கு கிடைக்காது. சிறிது காலம் செல்லும். இதுதான் பொருளியல் கோட்பாடு. வரி அதிகரிக்கப்பட்டால் உடனடியாக பொருட்களின் விலை அதிகரிக்கும். 

ஆகவே, சீனி இறக்குமதியில் எவ்வித மோசடியும் ஏற்படவில்லை. அரச வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதென்பதை ஏற்றுக் கொள்கிறோம். மக்களின் நலனுக்காகவே அரசாங்கம் இந்த விடயத்தை செய்துள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad