அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளை பலவந்தமான முறையில் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளாக்கியவர்கள் இன்று சர்வதேச அரங்கில் மனித உரிமை குறித்து வாதிடுகிறார்கள். ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றி கொள்ளும். இராணுவத்தினரை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் தேவையாயின் இயற்றப்படும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றி கொள்ளும். இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரது அறிக்கை இலங்கையின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டது.
இறுதி கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தேவையான சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக 2019 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆணையாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அப்பாவி தமிழ் இளைஞர்களை பலவந்தமான முறையில் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளாக்கியவர்கள் இன்று சர்வதேச அரங்கில் மனித உரிமை பேரவை குறித்து வாதிடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத்தினரை அரசியல் பழிவாங்களுக்குட்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இராணுவத்தினரை பாதுகாக்க தற்போதை சட்டம் போதுமானதாக அமையாவிடின் புதிதாக சட்டத்தை உருவாக்குவோம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் இவ்விடயத்தை கருத்திற் கொண்டு ஆணையை வழங்கியுள்ளார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இலங்கை 70 வருட காரமாக இணக்கமாக செயற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை முழுமையாக செயற்படுத்தியுள்ளோம். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு எதிராக செயற்படுகிறார். ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ளும் என்றார்.
No comments:
Post a Comment