(இராஜதுரை ஹஷான்)
வில்பத்து காடழிப்புக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் இன்று சூழலியலாளர்களாக இயற்கையினை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த குறிப்பிடப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் தற்போது இரண்டாம் பாகமாக தோற்றம் பெற்றுள்ளது. அரசியல் சூழ்ச்சியினால் ஆட்சி மாற்றத்தை இனியொருபோதும் ஏற்படுத்த முடியாது என கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றுள்ளது. கொவிட்-19 வைரஸ் தாக்கம் குறுகிய காலத்தில் பாரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த திட்டமிடலின் ஊடாக அனைத்து சவால்களும் வெற்றி கொள்ளப்பட்டு நாடு தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.
அரசியல் மற்றும் சமூக களத்தில் காடழிப்பு விவகாரம் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. வெளிநாடுகளில் அழிக்கப்பட்டுள்ள காடுகளின் புகைப்படங்களை கொண்டு தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வில்பத்து காடு அரசியல்வாதிகளினால் திட்டமிட்டு அழிக்கப்படும் போது அதற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் இன்று இயற்கையை பாதுகாக்கும் சூழலியலாளர்களாக அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.
வனப் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது அதனையும் சுற்றுச்சூழல் அழிப்பு செயற்பாடு என போர்க்கொடி தூக்குகிறார்கள். ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல் செயற்திட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எதிர்த்தரப்பினர் அப்போதைய அரசாங்கத்துக்கு எதிராக இவ்வாறான பல குற்றசாட்டுக்களை முன்வைத்தார்கள். போலியான குற்றச்சாட்டுக்கள் அப்போது வெற்றியீட்டியது. அவ்வெற்றியும் நெடுநாள் நீடிக்கவில்லை.போலியான குற்றச்சாட்டுக்களினால் இனி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
இயற்கை வளங்கள் ஏதும் அழிக்கப்படவில்லை. சுபீட்சமான இலக்கு கொள்கைத்திட்டத்தில் இயற்கையினை பாதுகாக்க குறிப்பிடப்பட்ட விடயங்கள் பல தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டு மக்களுக்கான அபிவிருத்தி பணிகளையும் எதிர்த்தரப்பினர் அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்வது கவலைக்குரியது என்றார்.
No comments:
Post a Comment