(இராஜதுரை ஹஷான்)
எதிர்க்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். சுற்றுச் சூழலுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது இயற்கை வளங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. காடழிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முறையான விசாரணைக்குட்படுத்தப்படும் என வன மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.
காடழிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச அதிகாரத்துடன் வனப் பகுதிகள் அழிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்த்தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இவ்வாறான குற்றச்சாட்டுக்களினால் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது.
வனப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அபிவிருத்தி பணிகளின் போது இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்திட்டங்களை முன்னெடுக்க உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க பல செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வனப் பகுதிகளை 30 வீதத்தால் அதிகரிக்க நாடு தழுவிய ரீதியில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பபகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன. ஆகவே சுற்றுச் சூழலுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
காடழிப்பு குறித்து பல குற்றச்சாட்டுக்கள் இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ளன அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வனஜீனராசிகள் அமைச்சுக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment