அரசாங்கத்துக்கு முடியாவிட்டால் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படையுங்கள் - ஹரின் பெர்னாண்டோ - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

அரசாங்கத்துக்கு முடியாவிட்டால் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படையுங்கள் - ஹரின் பெர்னாண்டோ

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கத்துக்கு முடியாவிட்டால் அந்த பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பல வேலைத்திட்டங்களை ஆரம்பத்திலிருந்து நாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். எனினும் அவை தொடர்பில் இதுவரையில் எவ்வித அவதானமும் செலுத்தப்படவில்லை.

இவ்வாறு இலங்கையர்களை அழைத்து வருவதற்கான நிதியை சேகரித்து விமானங்களை ஏற்பாடு செய்து எம்மால் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். எனினும் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு தூதரகங்களுடன் எம்மால் நேரடியாக தொடர்புகொள்ள முடியாது.

மாறாக தூதரகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சகல இலங்கையர்களால் நாம் நாட்டுக்கு அழைத்து வந்தாலும், பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் சிக்கல் ஏற்படும். இது தொடர்பில் அரசாங்கம் எம்முடன் கலந்தாலோசித்தால் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சியடைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு - ஹைட்பார்க்கில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு கட்சி பேதமின்றி சகலரும் எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad