(நா.தனுஜா)
சர்வதேச அமைப்புக்களிடமிருந்து கடனையோ, நிதியுதவியையோ அல்லது வேறு உதவிகளையோ பெறும்போது அரசாங்கம் எவ்வித குறைகளையும் கூறுவதில்லை. ஆனால் மனித உரிமைகள் விடயத்தில் மாத்திரம், இத்தகைய சர்வதேச அமைப்புக்களை அரசாங்கம் குறை கூறுகின்றது. அவை நாட்டின் சுயாதீனத்துவத்திற்கும் இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளின் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சுமத்துகின்றது. நாட்டின் பிரஜைகளைப் படுகொலை செய்தல், துன்புறுத்துதல் ஆகிய விடயங்களில் மாத்திரம் நாட்டிற்குள்ளேயே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே இது பிரதிபலிக்கின்றது என்று முன்னிலை சோசலிஸக் கட்சியின் பிரசாரச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை தொடர்பில் தீர்மானமொன்றை முன்வைத்திருக்கின்றன.
அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையைப் பொறுத்த வரையில், இலங்கையில் போர் முடிவடைந்து. சுமார் 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அது குறித்த பொறுப்புக் கூறலை நிறைவேற்றுதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாகவும் ஆகவே நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்தும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மீதான முதலாவது வாக்கெடுப்பின் போது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எனினும் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக சீனா, ரஷ்யா, வியட்நாம், லாவோஸ், கியூபா போன்ற நாடுகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.
அதேபோன்று எமது பிராந்தியத்திலுள்ள பாகிஸ்தான், மாலைதீவு போன்ற முஸ்லிம் நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன. அத்தோடு இவ்விடயத்தில் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் நடுநிலை வகிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றன. இது இலங்கை தொடர்பான பிரச்சினையாக இருந்தாலும், இவ்விடயத்தில் நாடுகள் இரு அணிகளாகப் பிளவுபட்டிருப்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகள் நியாயமற்றவை என்றும் அவை மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்பவே செயற்படுகின்றன என்றும் எமது நாட்டிற்குள் அரசாங்கம் கூறுகின்றது.
எனினும் சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக ஸ்தாபனம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அவ்வாறான சர்வதேச அமைப்புக்களுடனேயே அரசாங்கம் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றது.
அத்தகைய அமைப்புக்களிடம் உதவிகளைப் பெறுவதுடன் அவற்றின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுகின்றது. அதேபோன்றுதான் மக்களும் உள்நாட்டிற்குள் தீர்வு வழங்கப்படாத, வழங்கப்பட முடியாத பிரச்சினைகளுக்கு சர்வதேச அமைப்புக்களை நாடுகின்றார்கள்.
எனவே சர்வதேச அமைப்புக்களிடமிருந்து கடனையோ, நிதியுதவியையோ அல்லது வேறு உதவிகளையோ பெறும்போது அரசாங்கம் எவ்வித குறைகளையும் கூறுவதில்லை. ஆனால் மனித உரிமைகள் விடயத்தில் மாத்திரம், இத்தகைய சர்வதேச அமைப்புக்களை அரசாங்கம் குறைகூறுகின்றது. அவை நாட்டின் சுயாதீனத்துவத்திற்கும் இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளின் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சுமத்துகின்றது.
நிதி, சுற்றாடல் உள்ளிட்ட வேறு பல விடயங்களில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவதில் அரசாங்கத்திற்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் நாட்டின் பிரஜைகளைப் படுகொலை செய்தல், துன்புறுத்துதல் ஆகிய விடயங்களில் மாத்திரம் நாட்டிற்குள்ளேயே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அரசாங்கம் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment