ஜேர்மனியில் முடக்கநிலையை மூன்று வாரங்களுக்கு நீடித்தார் சான்செலர், அஞ்சலா மேர்கல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 24, 2021

ஜேர்மனியில் முடக்கநிலையை மூன்று வாரங்களுக்கு நீடித்தார் சான்செலர், அஞ்சலா மேர்கல்

ஜேர்மனியில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலைத் தாக்கம் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் ஈஸ்டர் விடுமுறையை முழுமையாக உள்ளடக்கியதாக அந்நாட்டில் முடக்க நிலை மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வரவிருக்கும் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் தேசிய நோய் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்தது. 

அதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து மாகாண ஆளுனர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பேசிய சான்செலர், அஞ்சலா மேர்கல், இந்தக் கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் என்று அறிவித்தார்.

இதில் ஏப்ரல் 1 முதல் 5 ஆம் திகதி வரை பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு ஒன்றுகூடல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

ஜேர்மனி தற்போது தீவிர நிலையை எதிர்கொண்டிருப்பதாக மேர்கல் தெரிவித்துள்ளார்.

“நோய்ச் சம்பவங்கள் அதிகவேகமாக உயர்ந்து வருவதோடு அவசர சிகிச்சை படுக்கைகள் மீண்டும் நிரம்பி வருகின்றன” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பாவில் அண்மைய வாரங்களில் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு தடுப்பு மருந்து வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 7,485 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியில் இதுவரை 26 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad