சுற்றாடல் பாதுகாப்பை வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் - அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு : திஸ்ஸ அத்தனாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

சுற்றாடல் பாதுகாப்பை வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் - அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு : திஸ்ஸ அத்தனாயக்க

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற வன அழிப்புக்கள் மற்றும் சுற்றாடல் சீரழிவுகள் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்துகின்ற பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சுற்றாடல் பாதுகாப்பை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி புதன்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற பாரிய வன அழிப்பு மற்றும் சுற்றாடல் சீரழிவுகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்கான மாநாடுகளை சகல மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தோடு யாரும் எதிர்பார்த்திராதளவிற்கு அரசாங்கம் பாரிய மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளது.

இதேபோன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அதற்கமைய புதன்கிழமை (நாளைமறுதினம்) கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் மாலை 03.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் வாரங்களில் தமிழ் - சிங்கள சித்திரைப்புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனினும் இம்முறை மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையால் அதனை கொண்டாட முடியாத நிலைக்கு மக்கள் அரசாங்கத்தால் தள்ளப்பட்டுள்ளனர். 

அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. சில பொருட்களின் நிர்ணய விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகின்ற போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

புத்தாண்டை முன்னிட்டு சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இவ்வாறு நிவாரணம் வழங்குவதாகக் கூறி மக்களுக்கு பாவனைக்குதவாத பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

சுற்றாடல் சீரழிவு தொடர்பில் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதைப் போல தற்போது ஊடகங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு ஒருபோதும் இடமளிக்காது. 

ஊடகங்கள் ஊடாகவோ அல்லது வேறு எவ்வகையிலேனும் சுற்றாடல் சீரழிவு தொடர்பில் தகவல்களை தெரிவிப்பதற்கு பொதுமக்களுக்கு உரிமையுண்டு. இவற்றுக்கு செவி சாய்த்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment