புலனாய்வு அதிகாரிகள் சரியான நேரத்தில் உரிய தகவல்களை தந்திருப்பின் தாக்குதல்களை தடுத்திருப்பேன் என்கிறார் மைத்திரி - News View

Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

புலனாய்வு அதிகாரிகள் சரியான நேரத்தில் உரிய தகவல்களை தந்திருப்பின் தாக்குதல்களை தடுத்திருப்பேன் என்கிறார் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய புலனாய்வு தகவல்களை புலனாய்வு அதிகாரிகள் தனக்கு உரிய வகையில் அறிவித்திருந்தால் தாக்குதலை எந்த வழியிலாவது தடுத்திருப்பேன் என முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யுத்த காலத்திலும் இது போன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன. அவை பயங்கரவாத தாக்குதல்கள் என்பதனால் அதிகாரிகளுக்கு அதில் பொறுப்புக்கூறல் இருக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அதேபோன்றதே என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சிலர் என்னை இந்த விவாதத்தில் கதைக்க வேண்டாம் என்றும் சிலர் கதைக்குமாறும் கூறினர். ஆனால் நான் எனது மனசாட்சிக்கு அமைய இங்கு சில விடயங்களை கூறியாக வேண்டும். 

என்னைப் பற்றி மக்கள் மயமாகியுள்ள கருத்துக்கள் என்ன என்பதனை நான் அறிவேன். நானே அமைத்த அமைச்சரவையின் அமைச்சர் ஒருவர் தாக்குதல் நடக்க முன்னர் ஜனாதிபதி அறிந்துள்ளார்.

இதன்படி இந்த தாக்குதல் தொடர்பாக தகவல்களை அறிந்து நான் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த சபையில் முழு அறிக்கையையும் வாசித்த யாரும் இல்லை என்றே நினைக்கின்றேன். அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்காது யாருக்கும் ஏதேனும் முடிவுக்கு வந்துவிட முடியாது.

நான் 2015 இல் ஜனாதிபதியான போது அரசாங்கத்தில் ஒரு பகுதியினரே எனக்கு ஒத்துழைப்பு வழங்கினர். பெரும்பான்மை ஆதரவு இன்றி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலேயே நான் பணியாற்றினேன். 

எவ்வாறாயினும் தேசியப் பாதுகாப்பை பலவீனமடைவதற்கு ஒருபோதும் இடமளிக்கவில்லை. தேசியப் பாதுகாப்பு தொடர்பாக சகல தீர்மானங்களையும் எடுத்தோம்.

எவ்வாறாயினும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக அதற்கு முன்னர் புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த நிலையில், அந்த தகவல் புலனாய்வு அதிகாரிகளுக்கிடையே பகிரப்பட்டிருந்த போதும், தாக்குதல் நடந்து முடியும் வரையில் தனக்கு அதுபற்றி அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. 

அந்த சம்பவத்தின் போது வெளிநாட்டில் வைத்தியசாலையொன்றில் இருந்தேன். அப்போது அதிகாரிகள் யாருக்கும் என்னுடன் கதைக்க முடியாது இருந்தது. இந்நிலையில் எனக்கு அதுபற்றி தெரியும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாததது.

இதேவேளை தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் 60 பேர் வரையில் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராகவே வழக்கு தொடர வேண்டும். அதனை தாமதப்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad