போலி முகவரிகளை பயன்படுத்தி தபால் மூலம் போதைப் பொருள் கடத்தல் - 4 ஆயிரம் மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட வெவ்வேறு போதைப் பொருட்கள் பறிமுதல் - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

போலி முகவரிகளை பயன்படுத்தி தபால் மூலம் போதைப் பொருள் கடத்தல் - 4 ஆயிரம் மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட வெவ்வேறு போதைப் பொருட்கள் பறிமுதல்

(எம்.மனோசித்ரா)

டுபாய் மற்றும் பிரான்சிலிருந்து தபால் பொதியூடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள 4000 இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட வெவ்வேறு போதைப் பொருட்கள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் தபால் மூலம் போதைப் பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமையவே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2020 டிசம்பர் 26 ஆம் திகதி விமானத்தினூடாக டுபாயிலிருந்து இலங்கைக்கு பொதியொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியை அனுப்பியவர் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர் போலியானது என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த பொதியை பெற்றுக் கொள்ள உரித்துடையவர் அதனைப் பெற வரவில்லை என்பதோடு, ஆரம்பத்திலிருந்தே இப்பொதி சந்தேகத்திற்குரியதாகக் காணப்பட்டது. 

அதற்கமைய அதனை சோதனை செய்த போது அதிலிருந்து கஞ்சா, மிஷ்ர மற்றும் குஷ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் 26 கிராமும், குஷ் எண்ணெய் 28 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று ஜனவரி 4 ஆம் திகதி பிரான்சிலிருந்து டுபாய் ஊடாக பொதியொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த பொதியிலிருந்து 4962 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பொதியும் போலியான பெயர் குறிப்பிடப்பட்டே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போலியான பெயர்களைக் குறிப்பிட்டு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பொதிகளை போலியான ஆவணங்களைக் காண்பித்து பெற்றுக் கொள்ளும் வியாபாரம் இவ்வகையில் முன்னெடுக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் மற்றும் தபால் பொதி சேவையுடன் இணைந்து பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அனுப்பப்படுகின்ற பொதிகள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு போலியான பெயர்களில் போதைப் பொருட்கள் அடங்கிய பொதியை அனுப்பிய நபர்கள் தொடர்பிலும், யாருக்கு அனுப்பப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதற்கிடையில், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பொதிகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன், புதிய வகை போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment