ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சபாநாயகர்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான தனது நிலைப்பாட்டில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் உறுதியாகவுள்ளார்.

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ள ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

அத்தோடு ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஒரு பிரேரணையை சமர்ப்பிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சியை அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவுறுத்திய போதிலும் சபாநாயகரின் நடவடிக்கைகள் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த விவகாரத்தில் அவர் கண்மூடித்தனமாக இருப்பதாகவும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிப்பது சபாநாயகரின் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் ஆளும் கட்சியால் அவரது இந்த கேள்வி குறித்து ஆட்சேபனை எழுப்பட்டபோதும் இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, குறித்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது என்றார்.

அத்தோடு இந்த மாத இறுதிக்குள் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் குறித்து உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment