பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான குழுவின் வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அசாத் சாலி - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான குழுவின் வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அசாத் சாலி

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை வெளியிடுவதற்கு தாமதிக்காப்படுவதால் சடலங்களை குளிரூட்டிகளில் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பேராசிரியர் ஜெனீபர் பெரேரா குழுவின் வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளிவந்துள்ளபோதும் அது தொடர்பான சுகாதார வழிகாட்டகள் தயாரிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்றில் மரணிப்பவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய உலகில் அனைத்து நாடுகளும் அனுமதித்திருந்தபோதும் இலங்கை மாத்திரம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

கொவிட் மரணங்கள் தொடர்பாக ஆராய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தொழிநுட்ப குழுவை காரணம் காட்டி இதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.

பின்னர் சுகாதார அமைச்சின் செயலாளரினால் பேராசிரியர் ஜெனீபர் பேரேரா தலைமையில் வைரஸ் தொடர்பான நிபுணர் குழுவொன்றை நியமித்து, இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான குழு இது தொடர்பாக ஆராய்ந்து, அடக்கம் மற்றும் தகனம் இரண்டையும் அனுமதித்து பூரண அறிக்கை ஒன்றை கடந்த டிசம்பர் 28ஆம் திகதி சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கையளித்திருந்தது.

என்றாலும் அரசாங்கம் அந்த அறிக்கையை மறைத்து வந்ததுடன் அறிக்கையை பிரதான தொழிநுட்ப குழுவுக்கு சமர்ப்பித்து அவர்களது தீர்மானம் வரும்வரை காத்திருப்பதாக தெரிவித்து வந்தது.

ஆனால் தற்போது ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் சர்வதேச நாடுகள் இலங்கையில் இடம்பெற்று வந்த பலவந்த ஜனாசா எரிப்புக்கு எதிராக கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தன.

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் நிலை இருந்த நிலையிலேயே அரசாங்கம் திடீரென கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதித்து வர்த்தமானியை வெளியிட்டது. ஜெனிவா கூட்டம் இல்லை என்றிருந்தால் இன்னும் அனுமதி கிடைத்திருக்காது.

அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை அவசரமாக வெளியிட்டதால்தான் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களைக்கூட தயாரிக்க முடியாமல் போயிருக்கின்றது.

அதனால் அரசாங்கம் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதித்தது, தொழில் நுட்ப குழுவின் பரிந்துரைக்கமைய அல்ல. அவ்வாறு இருந்தால் ஏற்கனவே இதற்கான அனுமதி கிடைத்திருக்க வேண்டும்.

சர்வதேச நாடுகளின் அழுத்தமே அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு காரணமாகும். அத்துடன் அடக்குவதற்கான வழிகாட்டல் இன்னும் தயாரிக்கப்படாமல் இருப்பதால் அதிகமான சடலங்கள் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன.

அதனால் தொடர்ந்தும் தாமதிக்காமல் பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான குழுவின் வழிகாட்டல்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment