இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களை அனுமதிக்க டக்ளஸ் தேவானந்தா புதிய யோசனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 31, 2021

இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களை அனுமதிக்க டக்ளஸ் தேவானந்தா புதிய யோசனை

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிடம் முன்வைத்துள்ளார்.

சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அனுமதிப்பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தான் யோசனை முன்வைத்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த அனுமதிப்பத்திர நடைமுறையானது, நாட்டு படகுகளுக்கு மாத்திரமே செலுப்படியாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போட்டம் ட்ரோலரிங் படகுகளுக்கு இந்த அனுமதிப்பத்திர நடைமுறை செலுப்படியாகாது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதைத்தவிர மேலும் பல யோசனைகள் காணப்படுவதாக கூறிய அவர், அவற்றில் இந்த அனுமதிப்பத்திர நடைமுறை ஒரு யோசனை எனவும் குறிப்பிட்டார்.

இந்த யோசனையின் கீழ், இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மாத்திரமே இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்க யோசித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.

இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் முழுமையான கட்டுப்பாடுகளின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்க யோசனையை தான் முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.

நாட்டு படகுகளின் தடை செய்யப்பட்ட விதிமுறைகளின் கீழ் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் கூறுகின்றார்.

அதேவேளை, பாட்டம் ட்ராலிங் மீன்பிடி நடவடிக்கை முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை மீனவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையிலேயே இந்த திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

இலங்கை இந்திய மீனவப் பிரச்னை தொடர்பில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ்

No comments:

Post a Comment