கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி : “சவுதி இளவரசர் "தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்" - ஹாடீஜா ஜெங்கிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி : “சவுதி இளவரசர் "தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்" - ஹாடீஜா ஜெங்கிஸ்

கொலை செய்யப்பட்ட சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி திருமணம் செய்து கொள்ள இருந்த ஹாடீஜா ஜெங்கிஸ், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் "தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

"அது நாங்கள் கோரும் நீதியாக மட்டுமல்ல இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் செயலாகவும் இருக்கும்" என ஹாடீஜா ஜெங்கிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் கொலைக்கு ஓப்புதல் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கும் அமெரிக்க புலனாய்வு அறிக்கை ஒன்று வெளியான பிறகு ஹாடீஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அமெரிக்க புலனாய்வு அறிக்கையை சவுதி அரேபிய மறுத்துள்ளது. அதேபோல சவுதி அரேபிய இளவரசர் கஷோக்கியின் கொலையில் தனக்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஜமால் கஷோக்கி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு சென்றபோது கொலை செய்யப்பட்டார்.

ஹாடீஜா ஜெங்கிஸ் என்ன கூறியுள்ளார்?
"குற்றமற்ற, அப்பாவியான கஷோக்கியின் கொலைக்கு ஆணையிட்ட பட்டத்து இளவரசர் எந்த தாமதமும் இன்றி தண்டிக்கப்படுவது அவசியம்," என அவர் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

"முடிக்குரிய இளவரசர் தண்டிக்கப்படவில்லை என்றால், அது என்றைக்கு நம் அனைவருக்கும் ஆபத்தாக இருக்கும். மனித குலத்தின் மீது படிந்த கரையாக அது இருக்கும்," என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் துருக்கிய ஆய்வாளரான அவர், உலக தலைவர்கள் சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மானிடமிருந்து விலக வேண்டும் என்றும், சவுதி அரேபியா மீது தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

"அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனில் தொடங்கி, உலக தலைவர்கள் அனைவரும் இளவரசர் முகம்மது பின் சல்மானுடம் கைக்குலுக்க தயாராகவுள்ளனரா என தங்களை தாங்களே கேள்வி கேட்க வேண்டும்," என அவர் தெரிவித்துள்ளார்.

"ஒவ்வொறுவரும் தங்கள் இதயத்தின் மீது கை வைத்து, முடிக்குரிய இளவரசரை தண்டிக்க கோர வேண்டும்," என்றார்.

முகம்மது பின் சல்மானை நேரடியாக தண்டிக்க வேண்டாம் என்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முடிவுக்கு அவர் சார்ந்த ஜனநாயக கட்சியிலிருந்தே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவின் இந்த புலனாய்வு அறிக்கை வெள்ளியன்று வெளியான பின், ஜோ பைடன் நிர்வாகம் இளவரசர் முகம்மது பின் சல்மானின் மூத்த உதவியாளர் மற்றும் கஷோக்கியின் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது தடைகளை விதித்தது.

"நடத்தையில் மாறுதல்கள் வரவில்லை என்றால் இளவரசர் சல்மான் மீது வெளிப்படையான கூடுதல் தடைகள் விதிக்கப்பட வேண்டும்," என ஜனநாயக கட்சியின் செனட்டர் மார்க் வார்னர் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். இவர் செனட் புலனாய்வு கமிட்டியின் உறுப்பினராகவும் உள்ளார்.

குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்களும் மேலும் பல தடைகளை விதிக்க ஜோ பைடனை கோரியுள்ளனர். நாளை இது குறித்த அறிவிப்புகள் வரலாம்.

கடந்த வாரம் சவுதி அரேபிய மன்னருடன் தொலைபேசியில் உரையாடிய ஜோ பைடன், உலகளவில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின்படி நடக்கும் ஆட்சிக்கு அமெரிக்கா கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ஜமால் கஷோக்ஜி எப்படி கொல்லப்பட்டார்?

ஒரு காலத்தில் சவுதி அரேபிய அரசுக்கு ஆலோசகராக இருந்த, 59 வயதான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, சவுதி அரேபிய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். 

கடந்த 2018 அக்டோபரில் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் இருக்கும் சவுதி அரேபிய தூதரகத்துக்கு, தன் வருங்கால மனைவியை (துருக்கில் நாட்டைச் சேர்ந்தவர் இவர்) மணந்து கொள்வது தொடர்பாக சில அரசுப் பத்திரங்களைப் பெறச் சென்றார்.

சவுதி அரேபிய தூதரகத்துக்கு பாதுகாப்பாக வந்து போகலாம் என, அப்போது சவுதி அரேபியாவின் அமெரிக்க தூதராக இருந்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் சகோதரர் காலித் பின் சல்மான் உறுதிமொழி கொடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் இளவரர் காலித் அதை மறுத்தார்.

ஜமால் கஷோக்கிக்கு பலவந்தமாக அளவுக்கு அதிகமாக ஒரு மருந்து செலுத்தப்பட்டது. அதன் விளைவாக அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு, உள்ளூரில் இருக்கும் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது என சவுதி அரேபியாவின் விசாரணையாளார்கள் தரப்பு கூறுகிறது.

ஜமால் கஷோக்கியை சவுதி அரேபியாவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்ட சவுதி அரேபிய உளவுப் படை அதிகாரிகள் நடத்திய ஒரு ஆபரேஷனில், அவர் கொல்லப்பட்டதாகக் கூறியது சவுதி அரேபிய அதிகாரிகள் தரப்பு. 

அதில் தொடர்புடைய ஐந்து பேருக்கு, சவுதி அரேபிய நீதிமன்றம் கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில், முதலில் மரண தண்டனை வழங்கியது. அதன் பின் அவர்களது தண்டனையை 20 ஆண்டு சிறை தண்டனையாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment