சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொருட்கொள்வனவில் ஈடுபடுவர்கள், கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இக்காலப்பகுதிகளில் பின்பற்றபட வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், சுற்றுநிரூபமொன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்திற்கு இன்னும் மூன்று வார காலமே எஞ்சியிருக்கின்றன. இந்நிலையில் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக மக்கள் தற்போதிலிருந்தே பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனினும் கொவிட்-19 வைரஸ் பரவல் இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாததனால், வைரஸ் பரவல் தொடர்பில் அக்கறைக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
பண்டிகை காலத்தை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று எண்ணினாலும், வைரஸ் தொற்றுக்குள்ளாகி விட்டால் எமது எண்ணத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விடும். அதனால் நாட்டு மக்கள் அனைவரும் இது தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும்.
அதனால் பொருட்கள் கொள்வனவின் போது முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் தொடர்பில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும், வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தவறாது கடைப்பிடித்திருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தின் போது செயற்படும் விதம் தொடர்பில் மக்களுக்கு தெளிவினை ஏற்படுத்துவதற்காக, சுற்றுநிரூபமொன்றை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சுற்றுநிரூபம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய அது வெளியிடப்பட்டதன் பின்னர் அனைவரும் அந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதேவேளை முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாதவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3375 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 3,350 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் மக்கள் இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment