சீனாவின் மின்னுற்பத்தி திட்டங்கள் இந்தியாவிற்கு மாத்திரமல்ல இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் - ஆட்சியை பொறுப்பேற்று ஒரு வருடத்திற்குள் அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வி : முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

சீனாவின் மின்னுற்பத்தி திட்டங்கள் இந்தியாவிற்கு மாத்திரமல்ல இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் - ஆட்சியை பொறுப்பேற்று ஒரு வருடத்திற்குள் அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வி : முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் வடக்கு தீவுகளில் முன்னெடுக்கப்படும் சீனாவின் மின்னுற்பத்தி திட்டங்கள் இந்தியாவிற்கு மாத்திரமல்ல இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும், சுயாதீனத் தன்மைக்கும், அபிவிருத்திக்கும் பாரிய அச்சுறுத்தலாகும். எனினும் அரசாங்கம் இதனை புரிந்து கொள்ளவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தேசிய பொருளாதாரம், நாட்டு மக்களின் பொருளாதாரம் என்பவற்றை மேம்படுத்துவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடமில்லை. குறிப்பாக சர்வதேசத்துடன் சுமூகமாக பயணிக்கக் கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வதற்கான வேலைத்திட்டமும் அரசாங்கத்திடமில்லை.

மாறாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது மாத்திரமே இவர்களின் தேவையாகும். எதிர்வரும் தேர்தல்களிலும் இந்த அரசாங்கம் இதனையே செய்யும். ஆனால் சமூகத்தில் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்பதை உறுதியாகக் கூறுகின்றோம்.

ஆட்சியை பொறுப்பேற்று ஒரு வருடத்திற்குள்ளேயே அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது. தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. சர்வதேசத்தின் மத்தியில் தொடர் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

இந்தியாவிலிருந்து 40 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் இலங்கையில் அமைந்துள்ள தீவுகளில் மின் உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுடனான முரண்பாடுகள் மேலும் வலுவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையில் பாரிய போட்டியிருப்பது உலகில் அனைவரும் அறிந்த விடயங்களாகும். அந்த போட்டியில் சிக்கியுள்ள நாடாக இலங்கை காணப்படுகிறது. இது மிகவும் பாரதூரமான அச்சுறுத்தலாகும்.

இந்தியாவிலிருந்து 40 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் இலங்கையில் அமைந்துள்ள தீவுகளில் மின் உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமையால் இந்தியாவின் பகைமையை அதிகரித்துக் கொள்கின்றோம். இது தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும்.

அரசாங்கத்திற்கு முறையான வெளிநாட்டு கொள்கையும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆகக் குறைந்தது, இராஜதந்திர மட்டத்தில் இதனை எவ்வாறு அணுகுவது என்ற தெளிவு கூட இந்த அரசாங்கத்திடம் இல்லை.

முழு உலகமும் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான போட்டியை அறிந்துள்ள போதிலும், இந்தியாவிற்கு அருகிலுள்ள தீவுகளில் சீனாவிற்கு வாய்ப்பளிப்பது தேசிய பாதுகாப்பிற்கும், சுயாதீனத் தன்மைக்கும், அபிவிருத்திக்கும் பாரிய அச்சுறுத்தலாகும். அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்றார்.

No comments:

Post a Comment