புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, மாகாண சபைகளுக்கு அதிகார பரவலாக்கல் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இது என்கிறார் நிமல் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, மாகாண சபைகளுக்கு அதிகார பரவலாக்கல் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இது என்கிறார் நிமல்

புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு அதிகார பரவலாக்கல் இடம்பெற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளதாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரும் கைத்தொழில் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நிபுணர் குழுவுக்கு சுதந்திரக் கட்சி தமது யோசனைகளை நேற்றுமுன்தினம் கையளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாத்தல் மற்றும் அதற்கு முன்னுரிமை வழங்குதல் பிரதான விடயமாகும். அடிப்படை மனித உரிமை தொடர்பான அத்தியாயம் மாற வேண்டும் என்பதுடன், சுற்றுச் சூழலை பாதுகாத்தல், மனிதர்களை போன்று விலங்குகளுக்கும் இடம்பெறும் சித்திரவதைகள் அடிப்படை உரிமை மீறலாக கருதப்பட வேண்டும்.

சில விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரும் அதிகாரத்தை மாகாண மேல் நீதிமன்றங்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு அதிகார பரவலாக்கல் இடம்பெற வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே சுதந்திரக் கட்சி உள்ளது.

மாவட்ட சபைகள் அல்லது பழைய செனட் சபை முறைக்கு சமாந்திரமாக இருந்த இரண்டாம் சபை முறைகள் உருவாக்கப்பட வேண்டும். குறித்த சபையில் உறுப்பினர்களையும் படித்தவர்களையும் கொண்டு சபை உருவாக்கப்பட வேண்டும்.

விசேடமாக புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் விருப்பு வாக்கு முறை நீக்கப்பட வேண்டும். விருப்பு வாக்கு முறை நீக்கப்படும் விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடந்த முறையும் ஏமாற்றப்பட்டது. 

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக விருப்பு வாக்கு முறையை நீக்கி தொகுதிக்கு பொறுப்புக்கூறும் உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் முறையொன்றை பெற்றுக் கொடுக்கும் வாக்குறுதியின் படியே 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாம் ஆதரவளித்திருந்தோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment