பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் கீழ்த்தரமான செயல்! கைது செய்யக் கோரி கொதித்தெழுந்த மக்கள்! - News View

Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் கீழ்த்தரமான செயல்! கைது செய்யக் கோரி கொதித்தெழுந்த மக்கள்!

வலப்பனை பிரதேச சபையின் உறுப்பினர் தமிழ்மாறன் ஜனார்த்தனை, உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்தி, இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் சில்வர்கண்டி தோட்ட மக்கள், இன்று (26) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சில்வர்கண்டி தோட்ட கோவிலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவருக்கும் மேற்படிப் பிரதேச சபை உறுப்பினருக்கும் இடையில் நீண்டகால பகையுள்ளது.

இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினர் பழிவாங்கும் நோக்கில், நிர்வாக சபை உறுப்பினரது மகள், அவரது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பதாகைகளாக தோட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், குறித்த நபரை பொலிஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த உறுப்பினர் இளம் பெண்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறித்த நபரை அவரது கட்சியிலிருந்தும் விளக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவருடைய செயற்பாடு குறித்த ஆதாரங்களை தம்வசம் வைத்துள்ள பொதுமக்கள், கடந்த மூன்று நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் மேற்படி பிரதேச சபை உறுப்பினருக்கு, குறித்த பெண்ணின் புகைப்படங்களை வழங்கியதாகக் கூறப்படும் பெண்ணின் காதலனை, இராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (26) மாலைக்கு முன்னர், பிரதேச சபை உறுப்பினரை கைது செய்யாவிடின் பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad