சதொச தொடர்புபட்ட இரு வழக்குகளிலிருந்து ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை - வழக்கு உரிய முறையில் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

சதொச தொடர்புபட்ட இரு வழக்குகளிலிருந்து ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை - வழக்கு உரிய முறையில் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவிப்பு

சதொச ஊழியர்களை அரசியல் பணியில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பான இரு வழக்குகளிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்குகளின் பிரதிவாதிகளாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெனாண்டோ, முன்னாள் செயற்பாட்டு அதிகாரி மொஹமட் ஷாகிர் ஆகிய மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கிற்கு எதிராக, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனுவை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த வழக்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உரிய முறையில் தாக்கல் செய்யவில்லை எனத் தீர்ப்பளித்திருந்தது.

குறித்த வழக்கு இன்றையதினம் (26) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, குறித்த வழக்கிலிருந்து பிரதிவாதிகள் மூவரையும் விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

சதொச ஊழியர்கள் 153 பேரை அவர்களது கடமைகளில் இருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 40 மில்லியன் (ரூ. 4 கோடி) நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment