வவுனியா நகர சபையின் குத்தகை ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது, அனைத்து கட்டடங்களையும் நாளைக்குள் அகற்றாதுவிடின் நடவடிக்கை எடுப்போம் - தவிசாளர் இ.கௌதமன் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

வவுனியா நகர சபையின் குத்தகை ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது, அனைத்து கட்டடங்களையும் நாளைக்குள் அகற்றாதுவிடின் நடவடிக்கை எடுப்போம் - தவிசாளர் இ.கௌதமன்

வவுனியா சுற்றுலாமைய விடயத்தில் நகர சபையின் குத்தகை ஒப்பந்தம், குத்தகையாளரால் மீறப்பட்டுள்ளதாக வவுனியா நகர சபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

வவுனியா சுற்றுலாமைய விவகாரம் தொடர்பாக இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியாவில் நீர்ப்பாசன திணைக்களத்தின் அனுமதியுடன் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டீன் கீழ் வவுனியா மாவட்ட மக்களிற்கான பொழுதுபோக்கு மையம் ஒன்றை அமைத்திருந்தோம். இவ்வாறு அமைக்கப்பட்ட பொழுதுபோக்கு மையத்தினை கேள்வி கோரல் மூலமாக ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியிருந்தோம்.

இந்த விடயம் தொடர்பாக வவுனியாக்குள கமக்கார அமைப்பின் ஊடாக நகர சபை தலைவர், செயலாளர், நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இவ்வழக்கு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த குத்தகைதாரருக்கு எங்களது அனுமதி இல்லாமல் கட்டடங்களை அமைக்க முடியாது போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தோம். அந்த நிபந்தனைகளை குத்தகைதாரர் மீறியிருக்கிறார். புதிய கட்டுமானங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த புதிய கட்டடங்களை கடந்த 15 ஆம் திகதிக்கு முன்பாக அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியும், அது அகற்றப்படாமல், எமது அனுமதியின்றி மறுநாள் மேலும் கிரவல் மண்கள் அந்தப் பகுதிக்குள் கொட்டப்பட்டிருந்தது. அவற்றை அகற்றுவதற்காக நகர சபை ஊழியர்களையும் இயந்திரங்களையும் அனுப்பி வைத்தபோது, உட்செல்ல முடியாதபடி சுற்றுலாமையத்தின் பிரதான கதவு மூடப்பட்டிருந்தது. இவை அனைத்தும் எமது ஒப்பந்தத்தை மீறும் செயல்களே.

எனவே எம்மால் அனுமதி வழங்கப்படாமல் அமைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களையும் நாளைக்குள் (26) அகற்றுவதற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். அதற்குள் அகற்றாதுவிடின் எதிர்வரும் 29ஆம் திகதி அதனை அகற்றுவதற்கு நகர சபை நடவடிக்கைகளை எடுக்கும். 

நகர சபை அதனை அகற்றினால் குத்தகை ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி அவரது ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டு மீள கேள்விகோரப்பட்டு வேறு நபர்களிற்கு வழங்கப்படும்.

குறித்த சுற்றுலாமையம் தொடர்பாக நாளையதினம் வவுனியாவில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. போராட்டம் மேற்கொள்வது அவர்களது உரிமை. ஆனால் இந்த விடயத்தில் உண்மைத் தன்மையை கூற வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது.

வர இருக்கும் தேர்தலை மையப்படுத்தியும் தங்களை பிரபல்யபடுத்துவதற்காவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் 2200 லோட் கிரவல் மண்ணை குளத்திற்குள் கொட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது ஒரு பொய்யான வேடிக்கையான பிரச்சாரம். பொய்களை மக்களுக்கு கூறாதீர்கள். எமக்கு வழங்கப்பட்ட பகுதிக்குள்ளேயே நாம் அபிவிருத்திகளை செய்துள்ளோம். 2200 லோட் மண் போட்டிருந்தால் குளத்தின் பெரும்பகுதியே மூடப்பட்டிருக்கும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad