எம்.மனோசித்ரா
மினுவாங்கொடை மற்றும் உஹண ஆகிய பிரதேசங்களில் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப் பொருள், சட்ட விரோத மதுபான உற்பத்தி, காடழிப்பில் ஈடுபட்டமை என்பவை தொடர்பில் 50 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மினுவாங்கொடை பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் சட்ட விரோத மதுபான உற்பத்தி தொடர்பில் 13 சந்தேகநபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 34 சந்தேகநபர்களும், சட்ட விரோத போதைப் பொருள் தொடர்பில் 5 சந்தேகநபர்களும் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியோர் உள்ளிட்ட 53 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 12 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உஹண பொலிஸ் பிரிவில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கன ரக இயந்திரங்களைப் பயன்படுத்தி காடழிப்பில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இரு கனரக வாகனங்களும் டிரக்டர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை பொலிஸாரால் போதைப் பொருள் தொடர்பான கண்காணிப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதைப் போலவே, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும்.
No comments:
Post a Comment