1.9 லட்சம் டொலர் மதிப்பிலான கொரோனா நிதி மசோதா - அமெரிக்க செனட் சபையில் துணை ஜனாதிபதியின் ஆதரவுடன் நிறைவேறியது - News View

About Us

About Us

Breaking

Sunday, March 7, 2021

1.9 லட்சம் டொலர் மதிப்பிலான கொரோனா நிதி மசோதா - அமெரிக்க செனட் சபையில் துணை ஜனாதிபதியின் ஆதரவுடன் நிறைவேறியது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று இந்த நூற்றாண்டின் மிகவும் மோசமான பொது சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளது.‌‌

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. 

அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 3 கோடியை நெருங்கி வரும் நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 

இதனிடையே அமெரிக்காவில் வைரஸ் தொற்றும், அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.‌ 

இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வரும் அதேவேளையில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.‌

அந்த வகையில் கொரோனாவுடன் போராடும் அமெரிக்கர்களுக்கு கொரோனா நிவராண நிதி வழங்குவது உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய 1.9 லட்சம் அமெரிக்க டொலர் மதிப்பிலான ‘அமெரிக்க மீட்பு திட்டம்' என்கின்ற திட்டத்தை ஜோ பைடன் அறிவித்தார். 

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டொலர் நிதியுதவி பெறுவார்கள். மேலும் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு வாரம் தோறும் வழங்கப்படும் நிவாரண தொகை 300 டொலரில் இருந்து 400 டொலராக உயர்த்தப்படும்.‌ 

இது தவிர, 14 பில்லியன் டொலர் கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தவும், 25 பில்லியன் டொலர் சிறு வணிகங்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த திட்டத்தை விரைவாக நடைமுறைக்கு கொண்டுவர ஜனாதிபதி ஜோ பைடன் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் கொரோனா மீட்பு நிதிக்காக 1.9 லட்சம் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த திட்டம் மிகவும் விலை உயர்ந்தது என கூறி குடியரசு கட்சியினர் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் குடியரசு கட்சியினரை சரிசமமாக கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.‌

இந்த நிலையில் செனட் சபையில் கொரோனா மீட்பு நிதி மசோதா மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடந்தது. அப்போது ஏற்கனவே எதிர்பார்த்தது போலவே குடியரசு கட்சியினர் இந்த மசோதாவை புறக்கணித்தனர்.

செனட் சபையில் உள்ள குடியரசு கட்சி உறுப்பினர்கள் 50 பேரும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அதேபோல் ஜனநாயக கட்சியினர் 50 பேரும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

அதனைத் தொடர்ந்து செனட் சபையின் தலைவரும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இதன் மூலம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் செனட் சபையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

அடுத்த கட்டமாக இந்த மசோதா ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட பிரதிநிதிகள் சபையில் அடுத்த வாரம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.‌ அங்கு இந்த மசோதா எளிதில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment