தி.மு.க. கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் - கருத்துக்கணிப்பில் தகவல் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

தி.மு.க. கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் - கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 177 இடங்களை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என டைம்ஸ் நவ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களில் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தலில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் பத்திரிக்கையும், சி வோட்டர் என்னும் தனியார் நிறுவனமும் இணைந்து நடத்தியுள்ளது.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் தி.மு.க தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 177 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க - பா.ஜ.க - பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெறும் என்றும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் மூன்று இடங்களில் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், தினகரன் தலைமையிலான அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணி மூன்று இடங்களிலும், ஏனையவர்கள் இரண்டு இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தி.மு.க கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க கூட்டணிக்கு 34.6 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும், மக்கள் நீதி மையம் கட்சிக்கு 4.4 சதவீதமும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 3.6 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தை தொடர்ந்து ஏப்ரல் 6 ஆம் திகதி அன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தி.மு.க - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 16 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்புகளால் தி.மு.க கூட்டணியினர் உற்சாகமாகி, தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தி.மு.க கூட்டணி தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad