இலங்கையின் உள்ளக விவகாரத்தை இந்தியா தேர்தல் பிரசாரமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது - சர்வ கட்சி குழு அறிக்கையினை இவ்வாரம் சமர்ப்பிக்கவுள்ளோம் : பேராசிரியர் திஸ்ஸ விதாரன - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

இலங்கையின் உள்ளக விவகாரத்தை இந்தியா தேர்தல் பிரசாரமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது - சர்வ கட்சி குழு அறிக்கையினை இவ்வாரம் சமர்ப்பிக்கவுள்ளோம் : பேராசிரியர் திஸ்ஸ விதாரன

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் உள்ளக விவகாரத்தை இந்தியா மாநில தேர்தல் பிரசாரமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. ஒட்டு மொத்த சிங்கள மக்களும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வினை புதிய அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்த வேண்டும்.

சர்வகட்சி குழு அறிக்கையினை முழுமையாக செயற்படுத்தியிருந்தால். இனப்பிரச்சினைக்கு தீர்வு 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிடைக்கப் பெற்றிருக்கும். அப்போதைய அரசாங்கம் அவ்விடயம் குறித்து அக்கறை கொள்ளவில்லை. புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் சர்வ கட்சி குழு அறிக்கையினை இவ்வாரம் சமர்ப்பிக்கவுள்ளோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை, மீதான வாக்கெடுப்பு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் பல நாடுகள் எதிராகவும், ஆதரவாகவும் வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா எத்தீர்மானத்தை எடுக்கம் என்பது ஆசிய வலய நாடுகளின் பிரதான எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. ஜெனிவா விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்குவதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும் தற்போது அந்த வாக்குறுதியில் தளம்பல் நிலை காணப்படுகிறது.

இந்தியாவில் மாநில தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இலங்கையின் உள்ளக விவகாரம் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

தமிழர் விவகாரம், ஈழம் ஆகிய விடயங்கள் தென்னிந்தியாவின் தேர்தல் மேடைகளில் பிரதான காரணியாக காணப்படுகிறது. காலம்காலமாக உள்ள பிரச்சினையை இந்தியா தேர்தல் காலத்தில் பயன்படுத்திக் கொள்வது பொருத்தமற்றது.

ஜெனிவா விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட கூடாது என தென்னிந்திய அரசியல் பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது. பின்னணியில் இலங்கை தொடர்பான பிரேரணையின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் உள்ளக விவகாரத்தை இந்திய தேர்தல் பிரசாரமாக பயன்படுத்திக் கொள்வது தவறாகும்.

இலங்கையில் ஒட்டுமொத்த சிங்கள மக்களும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பினரும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை மேற்கொண்டுள்ளார்கள். இவ்விடயம் குறித்து எத்திரப்பினரும் கருத்துரைப்பதில்லை. ஜெனிவா விவகாரத்தில் நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு உட்பட்டு தீர்மானங்கள் எடுப்பது அவசியமானதாகும்.

பல்லின சமூகம் வாழும் நாட்டில் ஒரு இனத்தின் உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக முடக்கப்படும் போது அங்கு பிரிவினைவாதம் தோற்றம் பெறும் என்பதற்கு தமிழிழ விடுதலைப் புலிகள் அமைப்பு சிறந்த எடுத்துக்காட்டு. 

தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு மாத்திரமல்ல அதற்கு முற்பட்ட கால அரசியலமைப்புக்கள் கூட முரண்பட்ட தன்மையிலும் பிற இனத்தின் உரிமைகளை முடக்கும் வகையிலும் காணப்பட்டன.

30 வருட கால சிவில் யுத்தம் தோற்றம் பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.

தவறான நிர்வாகம் எல்லை மீறிய அதிகார பிரயோகங்கள் விடுதலை புலிகள் அமைப்பு தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணியாக அமைந்தது.

பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டன. இதற்கு சர்வதேச நாடுகளின் சுயநல போக்கும் ஒரு காரணியாக இருந்தது.

இனங்களுக்கு மத்தியில் புரையோடிபோயிருந்த இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய தேவை காணப்பட்டது. 1997 மற்றும் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சர்வகட்சி தலைவர் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தை அங்கிகரித்த அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வ கட்சி கூட்டத்தில் பங்குப்பற்றின. தமிழ தேசிய கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

20 தொடக்கம் 25 வரையான கூட்டங்கள் இடம்பெறும் போது அதிகார பகிர்வு குறித்து பேசப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி சர்வ கட்சி தலைவர் கூட்டத்தில் இருந்து வெளியேறியது.

சர்வகட்சி தலைவர் குழுவின் அறிக்கை யுத்தம் முடிவடைந்ததுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட்டது.

மாகாண மட்டத்தில் முழுமையான அதிகார பகிர்வு, உள்ளுராட்சி மன்ற மட்டத்தில் அதிகார பகிர்வு மற்றும் இனங்களுக்கிடையிலான சம அதிகார வழங்கல் என்ற பிரதான மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இவற்றை அக்காலகட்டத்தில் செயற்படுத்த உரிய கவனம் செலுத்தப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். புதிய அரசியலமைப்பு தொடர்பிலான லங்கா சமசமாஜ கட்சியின் யோசனையாக சர்வ கட்சி தலைவர் குழு அறிக்கையை இவ்வாரம் முன்வைக்கவுள்ளோம். கம்யூனிச கட்சியும் இதற்கு ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad