நாடு திரும்பும் இலங்கையர் கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Friday, March 12, 2021

நாடு திரும்பும் இலங்கையர் கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மனோ கணேசன்

தாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று, நாடு திரும்பும் இலங்கையர்களை 14 நாள் கட்டாய தனிமைக்காக, அரசு நடத்தும் நிலையங்களுக்கோ அல்லது சொந்த நிதியை செலுத்த சொல்லி ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகளுக்கோ அனுப்பப்படக்கூடாது. இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களது சொந்த வீடுகளில் சுயதனிமைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த யோசனைபற்றி கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளைஇடம் வினவிய போது, இன்னமும் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என நேற்று பாராளுமன்றத்தில் அவர் என்னிடம் தெரிவித்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது, தொழில் காரணமாகவோ அல்லது விடுமுறை நோக்கிலோ வெளிநாடு சென்றுள்ள இலங்கையர், தாம் இன்று வாழும் நாட்டில் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்று இருப்பார்கள் எனில், அவர்கள் இன்று தாய் நாடு திரும்பும் போது, அவர்களை தமது சொந்த வீடுகளிலேயே சுய தனிமைக்கு உள்ளாக்க வேண்டும்.

ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பது, அதற்கான கட்டண நிர்ணயம், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் விமான பயணசீட்டு கட்டணம் ஆகியவவை தொடர்பில் பெரும் திட்டமிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுபோல், அரசு நடத்தும் நிலையங்களில் நாட்கள் தங்க வைக்கப்படும் நாடு திரும்பும் இலங்கையர்களும், அங்கே முறையாக கவனிக்கப்படுவதில்லை. எல்லா இடங்களிலும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

இவற்றால், வெளிநாடுகள் சென்று உழைத்து அதன்மூலம் இந்நாட்டுக்கு அந்நிய செலவாணியை பெற்று தந்து, இன்று தொழில் இழந்து, பெரும் பொருளாதார சிக்கல்களில் மாட்டி இருக்கும் நம் நாட்டு மக்கள் பெரும் அவதியில் தள்ளப்பட்டுள்ளனர்.

நோயுற்றவர்கள் உடனடியாக வைத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஏனையோர் சொந்த வீடுகளில், கண்காணிப்பின் கீழ் சுய தனிமைக்கு உள்ளாகப்பட வேண்டும். உலகின்பல நாடுகளில் இந்த முறை இப்போது அமுலுக்கு வந்துள்ளது.

எனது இந்த யோசனைபற்றி கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளைஇடம் வினவிய போது, இதுபற்றி, இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் நேற்று பாராளுமன்றத்தில் என்னிடம் தெரிவித்தார்

எது எப்படி இருந்தாலும், நம் நாட்டு அப்பாவி மக்களின் நிர்க்கதி நிலைமையை பயன்படுத்தி பணம் பண்ணும் கோஷ்டிகளுக்கு இடம் அளிக்கும் முறையில் அரசின் சட்ட திட்ட விதி முறைகள் ஒருபோதும் அமைய கூடாது.

No comments:

Post a Comment