தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இரு தரப்பு மோதலில் 13 போலீசார் உட்பட 33 பேர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இரு தரப்பு மோதலில் 13 போலீசார் உட்பட 33 பேர் படுகாயம்

தாய்லாந்தில் முக்கிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறது.

தாய்லாந்தில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும், மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும், பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறது.

மாணவர்களின் இந்த போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் போராட்டக் குழுக்களின் தலைவர்களை கைது செய்து அவர்கள் மீது ‘லெஸ் மஜாஸ்ட்டே' எனப்படும் முடியாட்சி அவமதிப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து சிறையில் அடைத்து வருகிறது.

இந்த நிலையில் தங்களின் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் கைது செய்யப்பட்டுள்ள போராட்டக் குழு தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி தலைநகர் பாங்கொக்கில் உள்ள அரண்மனை முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள் அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்து விடாத வண்ணம் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர். 

ஆனால் போராட்டக்காரர்கள் அந்த தடுப்புகளை தாண்டி செல்ல முற்பட்டதால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கண்ணாடி போத்தல்கள் கற்கள் மற்றும் வெடி பொருட்களை வீசி எறிந்து தாக்கினர்.

அதேபோல் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வராததால் போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.

இரு தரப்பு மோதலில் 13 போலீசார் உட்பட 33 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 2 பத்திரிகையாளர்களும் அடங்குவர். மேலும் இந்தப் போராட்டம் தொடர்பாக 30 க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment