புர்கா அணிதலுக்கு தடை - 11 முஸ்லிம் அமைப்புகளுக்கு தடை - மதரஸா கல்விக்கு புதிய ஒழுங்குமுறை - இஸ்லாமிய பாடப்புத்தகங்களிலுள்ள அடிப்படைவாத கல்வி நீக்கல் : ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

புர்கா அணிதலுக்கு தடை - 11 முஸ்லிம் அமைப்புகளுக்கு தடை - மதரஸா கல்விக்கு புதிய ஒழுங்குமுறை - இஸ்லாமிய பாடப்புத்தகங்களிலுள்ள அடிப்படைவாத கல்வி நீக்கல் : ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குல்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்பதுடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி விட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுல்லாக மாறக்கூடுமென அடையாளம் காணப்பட்ட புர்கா அணிதலை தடை செய்யவும், இஸ்லாமிய பாடப்புத்தங்களில் உள்ள அடிப்படைவாதக் கல்வியை நீக்கவும், 11 முஸ்லிம் அமைப்புகளை தடை செய்யவும், மத்ரசா கல்வியை ஒழுங்குப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீது நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றும் போது, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 676 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 202 பேர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். 66 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 408 பேர் நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் அவர்கள் தொடர்பிலும் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தாக்குதல்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று முக்கிய அமைப்புகளை தடை செய்திருந்தார். தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாதே மில்தாதே இப்ரஹாம், மில்லாதே ஹல் சேலானி ஆகிய அமைப்புகளை அவர் தடை செய்திருந்தார். 

கடந்த 2019ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. அதன் பின்னர் தேசியப் பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக்குழு ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று அமைப்பட்டிருந்தது. ஆனால், இத்தாக்குதல்களை இலகுவாக தடுத்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளமை முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் தெளிவாகியுள்ளது.

இத்தாக்குதல்களுக்கு முன்னர் பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த சம்பவங்கள் தொடர்பில் உரிய வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் சந்தேகநபர்களை கைது செய்து தாக்குதல்களை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன.

என்றாலும் புலனாய்வுத்துறை முற்றாக சீர்குலைத்து இராணுவத்தினரை வலுவிலக்கச் செய்து குற்றப் புலனாய்வு பிரிவை முற்றாக அரசியல் மயப்படுத்தியிருந்தனர். தேசியப் பாதுகாப்பையும் பூச்சியமாக மாற்றியிருந்தமையால் மிகவும் இலகுவாக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

2018ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் அப்துல் ஷவிசாடின் வீட்டில் குண்டுத் தாக்குதலொன்று இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் 6 நாட்களின் பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி அலுவலகத்தில் குண்டுத் தாக்குதலொன்று இடம்பெற்றிருந்தது.

மீண்டும் ஆறு மாதங்களின் பின்னர் மட்டக்களப்பு பாலமுனையில் வெடிப் பொருட்கள் பரீட்சார்த்து நடவடிக்கையில் சஹரானின் சகாவான ரில்வான் படுகாயமடைந்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் இரண்டரை மாதங்களில் நுவரெலியாவில் உள்ள பயிற்சி முகாமுக்குச் சென்று வந்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டு வாரங்களின் பின்னர் வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் மாவனெல்ல புத்தர் சிலைகளை சேதப்படுத்தியிருந்தனர். அதன் பின்னர் மூன்று வாரங்களில் வனாத்தவில்லு பகுதியில் பாரிய தொகையான வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

2019ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல் வழங்குனர் தஷ்லிமை சுட்டுக் கொன்றுள்ளனர். 2019ஆம் ஏப்ரல் 16ஆம் திகதி துவிச்சக்கர வண்டியொன்றை வெடி வைத்து பரீட்சார்த்து பார்த்துள்ளனர். அதன் பின்னர் 5 நாட்களின் பின்னர்தான் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்மூலம் அப்போதைய அரசாங்கத்தின் மந்தகதியான செயற்பாடு தெளிவாகுவதுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத ஒழிப்பு பிரிவுகள் முறையான விசாரணையை மேற்கொள்ளாமை மற்றும் அவற்றுக்கு இடையில் தொடர்பு இல்லாமையின் மூலம் இப்பயங்கரவாதத் தாக்குல்களை தடுப்பதற்கான 9 சந்தர்ப்பங்கள் இல்லாது போயிருந்தன.

சமகால அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் மீண்டும் புலனாய்வுப் பிரிவு பலப்படுத்தப்பட்டதுடன் தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவுகள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி பலப்படுத்தப்பட்டன.

தாக்குதல்களுடன் தொடர்புடைய 99 பேர் உள்நாட்டிலும் 35 பேர் வெளிநாட்டிலும் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டோம். சர்வதேச புலனாய்வுத் துறையினருடன் இணைந்து ஐந்து நாடுகளில் 54 பேரை கைது செய்துள்ளோம். அதில் 50 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

ஏனைய 4 பேரும் குறிப்பிட்ட நாடுகளில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்தது அழைத்துவரப்படுவர். இவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் அடிப்படைவாதத்தை ஊக்குவிக்க செயற்பட்டுள்ளதுடன், அங்கு நிதிகளையும் சேகரித்து அனுப்பியுள்ளனர். அனைவருக்கு எதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வுத் துறையினருடன் இணைந்து கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும்.

2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சஹரானிடம் தாற்கொலைதாரிகளாக பயிற்சி பெற்றுள்ள 17 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் தற்போது இறந்துள்ளனர். மூன்று பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏனைய 2 பேரையும் கைது செய்ய நடவடிக்கையெடுக்கப்படும்.

2018ஆம் ஆண்டு இலங்கையின் நிறுவனமொன்றின் ஊடாக சீனாவிலிருந்த 1,400 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டு நாடு முழுவதும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 7 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

சஹரானின் வலையமைப்புக்கு அப்பால் இலங்கையில் செயற்படும் ஏனைய அடிப்படைவாதக் குழுகளையும் ஒடுக்கவும் அதன் பிரதான உறுப்பினர்களை கைது செய்யவும் புலனாய்வுத் துறையும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவும் செயற்பட்டு வருகிறது.

வன் உன்மா, ஸ்புத் தாஹிர், முஜர்தீன் ஹல்ஹா, சுப்பர் முஸ்லிம் உள்ளிட்ட குழுக்களாகும். முஸ்லிம் இராஜ்ஜியமொன்றை கட்டியெழுப்ப சஹரான், மதவாச்சி, வன்னி, தியவெல்ல ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, ஹிங்குல உள்ளிட்ட பகுதிகளில் நடத்தி சென்றுள்ள 8 பயிற்சி முகாம்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த முகாம்களுடன் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டுமுதல் சஹரானின் அனைத்து தேவைகளுக்கு நிதியையும் வாகனங்களையும் தெமட்டகொட இப்ராஹிம் சகோதரர்களே வழங்கியுள்ளனர். இவர்கள் 2018ஆம் ஆண்டு முதல் தாக்குதல் வரையான காலப் பகுதிவரை 500 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளனர்.

2014ஆம் ஆண்டு இஸ்லாமிய இராஜ்ஜியத்துக்கான பிரகடனத்தை ஐ.எஸ் அமைப்பின் தலைவர் வெளியிட்டதன் பின்னர் சஹரான் உள்ளிட்ட குழுவின் இஸ்லாமிய இராஜ்ஜிய கோட்பாடுக்காக செயற்பட்டுள்ளனர். மத அடிப்படைவாதிகளாக இவர்கள் மாறியுள்ளனர். 2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத அடிப்படைவாதத்திலிருந்து வன்முறையை நோக்கி சஹரான் பயணித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி காத்தான்குடியில் மாற்றுக்கருத்துடையவர்களை தாக்கியுள்ளமை சஹரானின் முதலவாது வன்முறை சம்பவமாகும். சஹரானை ஐ.எஸ் அமைப்பின் கருத்தியலுடன் இணைத்த பிரதானமானவராக நௌபர் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதல்களுக்கு தேவையான நிதியானது இல்ஹாம், இன்ஹாம் சகோரர்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அடிப்படைவாத அமைப்புகள் மூலமும் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே, ஐ.எஸ் அமைப்பின் கருத்தியலின் மூலமே உயிர்த்த இப்பயங்கரவாதத் தாக்குல்களுக்கான பின்புலம் உருவாகியுள்ளது.

தேசிய பாதுகாப்புத் தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக் குழுவின் சிபாரிசுகளை செயல்படுத்த ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மத்ரசாக்களில் உரிய கல்வி முறைமைகள் இல்லை. 5 வயது முதல் 10 வயது வரை அரச கல்வி கொள்கையின் கீழ் மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென அவதானம் செலுத்தியுள்ளோம்.

இந்த கொள்கையின் பிரகாரம் செயற்படாத பாடசாலைகள் அனைத்தும் தடை செய்யப்படும். ஏனைய மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சுடன் இணைத்து தரநிர்ணயம் மேற்கொள்ள நடவடிக்கையெடுக்கப்படும்.

சமகால அரசாங்கம் தாக்குதல்களுடன் தொடர்புடைய மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் 11 அமைப்புகளை அடையாளம் கண்டுள்ளதுடன் அவற்றை எதிர்காலத்தில் தடை செய்ய நடவடிக்கையெடுக்கப்படும்.

இஸ்லாமிய கல்வி புத்தங்களில் உள்ள அடிப்படைவாத கல்வியை நீக்குவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளோம். 1ஆம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையான பாடப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கைப்புத்தங்களில் ஏனைய மதங்களுக்கு எதிராக கருத்துகளும் சகவாழ்வுக்கு எதிராக வாஹாபி மற்றும் சூபி கருத்துகள் சூட்சமாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றை நீக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறும் விடயங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து வருகிறது. அதில் ஒரு செயற்பாடாக புர்கா அணிய தடை விதிக்கப்படும். முஸ்லிம் விவாக சட்டத்தை பொதுச் சட்டமாக மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அடிப்படைவாதச் செயற்பாடுகளுக்கு செல்பர்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததும் அவர்களை உடனடியாக கைது செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவருக்கும் அமைப்புகளுக்கும் எதிராக உச்சபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment