எமது அரசாங்கத்தில் கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம், தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடுவோம் - சரத் பொன்சேகா - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

எமது அரசாங்கத்தில் கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம், தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடுவோம் - சரத் பொன்சேகா

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

எமது அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று இந்த தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடுவோம் என பீல் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுக்கு குற்றம் தெரிவித்து பயனில்லை. விசாரணைக்குழுவினால் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க முடியாது. அது தொடர்பான அனுபவம் அவர்களுக்கு இல்லை. தாக்குதலை தடுக்க தவறியவர்களையே அவர்கள் பெயரிட்டிருக்கின்றனர்.

ஆனால் அரசாங்கம் ஆணைக்குழு அமைத்து தனது பொறுப்பில் இருந்து விலகி செயற்பட்டிருக்கின்றது. ஆணைக்குழு அமைத்து அரசாங்கம் நாடகம் ஒன்றையே மேற்கொண்டுள்ளது.

அதேபோன்று இந்த தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றோம். பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக 50 சாட்சியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழு 450 பேர் வரையானவர்களிடம் சாட்சியம் பதிவு செய்திருக்கின்றது. ஆனால் இரண்டு அறிக்கைகளுக்குமிடையில் பாரிய வித்தியாசம் இல்லை.

மேலும் கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்துடன்தான் இருக்கின்றார். மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக இருந்து மேற்காெண்ட தவறை அந்த அரசாங்கத்தில் இருந்த அனைத்து அமைச்சர்களும் பொறுப்பு கூற வேண்டியதில்லை.

அத்துடன் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம், தற்போது பெளத்த சிங்கள மக்களையும் மறந்து கத்தோலிக்க மக்களையும் மறந்து செயற்படுகின்றது.

அதனால் அடுத்த தேர்தலில் பெளத்த சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்காது என அரசாங்கத்திற்குள் பேசப்படுகின்றது. அதனால் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியுமான வேட்பாளரை போட்டியிட செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் எமது அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்போது பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடுவோம். சிங்கள பெளத்த மக்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment