சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட STF பாதுகாப்பு நீக்கப்பட நானே காரணம் - அமைச்சர் சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட STF பாதுகாப்பு நீக்கப்பட நானே காரணம் - அமைச்சர் சரத் வீரசேகர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படைப் பாதுகாப்பை தாமே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான தமிழ் பேசும் சமூகத்தின் நீதிக்கான பேரணி பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்றுமுன்தினம் மாலை பொலிகண்டியில் வெற்றியுடன் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியின் ஆரம்பத்தில் இருந்து நிறைவு வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் த. கலையரசன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர்.

இந்நிலையில் சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை நேற்றுமுன்தினம் இரவு திடீரென மீளப் பெறப்பட்டிருந்தது.

என்ன காரணத்திற்காக தனக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டது என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட எஸ்.டி.எப். பாதுகாப்பை தாமே நீக்கினார் எனவும், எதற்காக நீக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

"தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு எஸ்.டி.எப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான பேரணியில் கலந்துகொண்டிருக்க முடியாது. எனவே, அவருக்கு எஸ்.டி.எப். பாதுகாப்பு எதற்கு?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் சுமந்திரனுக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைப படுகொலை செய்ய மூன்று தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சிங்களப் பாதாள உலகக் கோஷ்டியினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என 30 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தற்போதும் 6 இற்கும் அதிகமான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் சந்தேகநபர்கள் பலர் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad