நாடு திரும்பவுள்ள இலங்கையர்களுக்கு ஒன்பது மாகாணங்களிலும் விசேட தனிமைப்படுத்தல் நிலையங்கள் - தூதரகங்களில் பதிவுசெய்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் இலவச தொலைபேசிக்கு அழையுங்கள் : அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

நாடு திரும்பவுள்ள இலங்கையர்களுக்கு ஒன்பது மாகாணங்களிலும் விசேட தனிமைப்படுத்தல் நிலையங்கள் - தூதரகங்களில் பதிவுசெய்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் இலவச தொலைபேசிக்கு அழையுங்கள் : அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

(நா.தனுஜா)

இலங்கைக்கு மீளத் திரும்பும் எதிர்பார்ப்புடன் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளை நாட்டிற்குத் திருப்பியழைத்து வந்ததன் பின்னர், கொவிட்-19 தடுப்பு வழிகாட்டல்களின் அடிப்படையில் தனிமைப்படுத்துவதற்கான இட வசதிகள் போதாமையின் காரணமாகவே அவர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் விசேட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைத்து, வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் புலம்பெயர் தொழிலாளர்களை அங்கு தனிமைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான விசா வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பல தொழிலாளர்கள் வெளிநாடுகளில் சிக்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

அதேவேளை நாட்டிற்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ள முடியாமல் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள், அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவுசெய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் 800119119 என்ற இலக்க இலவச தொலைபேசி சேவையின் ஊடாக விபரங்களை வழங்குங்கள் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட ஏதேனும் அத்தியாவசியத் தேவைகள் காணப்படுமாயின் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment