(செ.தேன்மொழி)
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 1268 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கண்காணிப்பதற்காக கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் சுற்றிவளைப்புகள் ஆரம்பித்திருந்தன.
அதற்கமைய நேற்று மாத்திரம் 840 நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 795 நிறுவனங்கள் முறையான சுகாதார சட்ட விதிகளை பின்பற்றியிருந்தன. 45 நிறுவனங்களில் மாத்திரமே சட்ட விதிகள் கடைப்பிடிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் இதுவரையில், மேல் மாகாணத்தில் 10 ஆயிரத்து 335 நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 9067 நிறுவனங்கள் முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்றியிருந்துள்ளன.
எஞ்சிய 1268 நிறுவனங்களில் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. இந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் எதிராக சட் டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலை மாவர்களை அழைத்துச் செல்லும் பொது வாகனங்கள் மற்றும் பாடசாலை வாகனங்களில் சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், இந்த வாகனங்களின் சாரதிகள், பேரூந்து நடத்துனர்கள் மற்றும் சாரதி உதவியாளர்கள் அனைவருக்கும் எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாடசாலை மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கத்திலேயே இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதுடன் , இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment