வவுனியா, செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று (01) மாலை 5.00 மணியளவில் முசல்குத்தி காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜெறின் எனும் 36 வயது நபரே படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை. செட்டிக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் ஆயுதங்களுடன் இருந்த மூவர், இராணுவத்தை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
செட்டிகுளம் பகுதியில் வில்பத்து நோக்கி சென்ற இராணுவத்தினர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்திய ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபர்களை கைது செய்பவதற்கான நடவடிக்கைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
எனினும் தாம் அவ்வாறு துப்பாக்கிகள் எதனையும் வைத்திருக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
தாங்கள் மரங்களை அறுப்பதற்காகவே காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும் மீண்டும் வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இராணுவம் திடீர் என்று தங்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்றும் ஒரு நபர் சிறு காயங்களிற்குள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(பி. சதீஷ், கே. வசந்தரூபன்)
No comments:
Post a Comment