இலங்கையில் இருக்கின்ற பிரச்சினை என்பது பல நாடுகளில் இருக்கின்ற பிரச்சினை போன்றுதான். இதற்காக ஐ.நாவுக்கு போகிறோம் என பயம் காட்டுகிறார்கள். அதனை பேசி தீர்க்கலாம் என மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் 4ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கி 4 வருடங்களில் அந்த கட்சியின் சார்பாக ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் அளவுக்கு இந்தக் கட்சி வளர்ந்திருக்கினறது. கிராம மட்டத்தில் இருந்து எமக்கு கிடைத்த ஆதரவும், ஒற்றுமையும்தான் இந்த வளர்ச்சிக்கு காரணம்.
அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் எமது ஆதரவுக் கட்சிகளுடன் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் நிலமை ஏற்பட்டிருந்தது. இந்தக் கட்சிக்காக வேலை செய்த சிலர் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறார்கள்.
ஆனால் தேர்தல் முடிந்த உடனடியாக ஏற்பட்டுள்ள இந்த காலக் கட்டத்தில் சரியான வேலைத்திட்டத்தை செய்யக் கூடிய நிலமை இல்லை. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரியளவிலான அபிவிருத்திகளை செய்ய முடியும்.
மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிகாரம் தந்தார்கள். அதற்கு ஈடாக மக்களுக்குரிய சேவைகளை செய்வதற்கு எங்களுடைய உயர்மட்ட தலைவர்களும், அரசாங்கமும் தயாராக இருக்கிறார்கள். மக்களிடம் இருந்து அபிவிருத்தியை நாங்கள் அடையாளப்படுத்த வேண்டும்.
கிராமங்களில் அபிவிருத்தியை அடையாளப்படுத்த கிராம மட்டத்தில் உள்ள எமது ஆதரவாளர்கள், சமூக மட்டத் தலைவர்கள் இணைந்துதான் அதனை தெரிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் வன்னி மாவட்டத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களை எடுத்துப் பார்த்தால் முதலாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும். இரண்டாவதாக முன்னாள் அமைச்சர் போட்டியிடுகின்ற கட்சி வரும்.
ஆனால் இம்முறை தேர்தலில் என்ன நடந்தது? எமது ஜனாதிபதி, பிரதமர், தேசிய அமைப்பாளர் மற்றும் எமது 9 வேட்பாளர்களின் நம்பிக்கை, கிராம மட்ட எமது தலைவர்களின் நம்பிக்கை என்பவற்றின் மூலம் இரண்டாவது இடத்திற்கு வந்தோம்.
இதில் இருந்து இனி பின்னுக்கு செல்ல முடியாது. நாங்கள் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அதனை நிறைவேற்ற வேண்டும்.
நாம் எது செய்தாலும் எதிர்க்கட்சி பிழையாகத்தான் கூறுவார்கள். இப்போது ஐ.நாவுக்கு போகிறோம் என பயம் காட்டுகிறார்கள். எமது ஜனாதிபதி தெளிவாக இருக்கிறார். இது பல் சமூகம் வாழும் நாடு. பல பிரச்சினைகள் இருக்கும். அதனை பேசித் தீர்க்கலாம் என்றார்.
வவுனியா விசேட நிருபர்
No comments:
Post a Comment